பள்ளி நுழைவாயில் முன் தேங்கும் மழை நீரால் மாணவர்கள் அவதி
பள்ளி நுழைவாயில் முன் தேங்கும் மழை நீரால் மாணவர்கள் அவதி
UPDATED : அக் 25, 2014 12:00 AM
ADDED : அக் 25, 2014 10:44 AM
பல்லடம்: வடுகபாளையம் ஊராட்சி அரசு துவக்கப் பள்ளி நுழைவாயில் முன் தேங்கும் மழை நீரால், மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர்.
பல்லடம் வடுகபாளையம் ஊராட்சி, ஆலுத்துப்பாளையத்தில் உள்ளது, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. பள்ளிக்குள் செல்வதற்கு, விநாயகர் கோவில் அருகே உள்ள வழி, பிரதானமாக உள்ளது. தாழ்வான இவ்வழித்தடத்தில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. மண் ரோடாக இருப்பதால், மழை நின்றாலும் தண்ணீர் வற்றி, அப்பகுதி உலர்ந்து இயல்பு நிலைக்கு திரும்ப, பல நாட்களாகிறது.
தற்போது பெய்த மழைக்கு, வழக்கம்போல் இப்பகுதியில் மழை நீர் தேங்கி, குட்டையாக காட்சியளிக்கிறது. பள்ளிக்கு செல்வதற்கு, குழந்தைகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. தண்ணீர் தேக்கத்தால், ஒரு கி.மீ., தூரம் நடந்துசென்று, மாற்றுவழியில் பள்ளியை மாணவர்கள் அடைய வேண்டியுள்ளது.
அப்பகுதியினர் கூறுகையில், "சில ஆண்டுகளுக்கு முன், எங்கள் பகுதியில் சிமெண்ட் ரோடு போட்டனர். அப்போது, பள்ளி செல்லும் ரோட்டையும் சமன் செய்து தருவதாக கூறினர்; ஆனால், செய்யவில்லை. மழைக்காலத்தில், தாழ்வான இப்பகுதியில் தேங்கும் மழை நீரால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சிரமத்தை மீறிச் செல்லும்போது, குழந்தைகளின் ஆடை மற்றும் காலணியில் சேறு படிந்து விடுகிறது. இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும்" என்றனர்.

