பள்ளி மற்றும் குறுவள மைய அளவில் கலை இலக்கிய போட்டிகள்
பள்ளி மற்றும் குறுவள மைய அளவில் கலை இலக்கிய போட்டிகள்
UPDATED : அக் 28, 2014 12:00 AM
ADDED : அக் 28, 2014 10:33 AM
கோத்தகிரி: கோத்தகிரியில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, பள்ளி மற்றும் குறுவள மைய அளவில் கலை இலக்கிய போட்டிகள் நடந்தது.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன(டயட்) முதல்வர் தேவராஜ் தலைமை வகித்தார். உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணியன் மற்றும் மாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள 7 குறுவள மையங்களில் இருந்து, 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர், 21 வகை போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
இதில், 1ம், 2ம் வகுப்பு மாணவர்களில், கேர்கம்பை அரசு பள்ளி மாணவர்கள் மெய்யரசன், அபிஷா ஆகியோர், கதை சொல்லுதல், ஓவியம் போட்டிளில் வெற்றிபெற்றனர். அவ்வூர் பள்ளியை சேர்ந்த சுரேந்திரன், ஜீவப்பிரியா ஆகியோர் திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டுப் போட்டியில் சாதித்தனர்.
மூன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை நடந்த பேச்சுப் போட்டியில், அவ்வூர் பள்ளி மாணவி காவியஸ்ரீ; ஓவியப்போட்டியில் புனித மரியன்னை பெண்கள் பள்ளி மாணவி தனலட்சுமி; தமிழ் கையெழுத்துப் போட்டியில் கேர்கம்பை பள்ளி மாணவி பூமிகா; ஆங்கில கையெழுத்து போட்டியில் கொட்டநள்ளி பள்ளி மாணவி கார்த்திகா; சொல்வதை எழுதுதல் போட்டியில், புனித அந்தோணியர் பள்ளி மாணவன் ஆதில்; பாட்டுப்போட்டியில் மிளிதேன் பள்ளி ஹரீஷ்; வாய்பாடு ஒப்புவித்தல் போட்டியில் சி.எஸ்.ஐ., பள்ளி நாகராஜ் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
மேலும், ஆறாம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை நடந்த பேச்சுப் போட்டியில், பவித்ரா, தேனிஷா; கட்டுரைப்போட்டியில் மோன்ராஜ், மதுமிதா; தனி நடிப்பு போட்டியில் சோபிகா; பாட்டுப் போட்டியில் கீர்த்தனா,சுரேகா; தனிநபர் நடனப் போட்டியில் கவுசல்யா; ஓவியம் போட்டியில் சுவேதா மற்றும் வினாடி-வினா மற்றும் குழு நடனம் போட்டிகளில் அந்தோணியர் பள்ளி மாணவர்கள் வென்றனர். முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த மாணவர்கள், வரும் 30ம் தேதி மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

