UPDATED : அக் 30, 2014 12:00 AM
ADDED : அக் 30, 2014 03:58 PM
ஊட்டி: அறிவியல் கண்காட்சியில் எதார்த்தமான விஷயங்களை அறிவியல் பூர்வமாக மாணவர்கள் விளக்கினர்.
பள்ளி கல்வித் துறை சார்பில், மாவட்ட அளவிலான, அறிவியல் கண்காட்சி, அறிவியல் நாடகம், அறிவியல் பெருவிழா மற்றும் அறிவியல் கருத்தரங்கம் ஆகியவை ஊட்டி புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி துவக்கி வைத்தார்.
படைப்புகள் ஏராளம்: இதில், ‘தனித்தனியாக மொபைல் டவர் பொருத்தி, மனிதர்கள் மற்றும் பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், வெளிநாடுகளில் உள்ளது போல், ஒரே டவரில் அனைத்து தொலைதொடர்பு கம்பெனிகளும் தங்களது ரிசீவரை பொருத்தி சேவை வழங்க வேண்டும்’ என்ற கருத்தை, லவ்டேல் புனித அந்தோணியார் பள்ளி மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
‘பள்ளி வகுப்பறை, சமையல் கூடம் போன்ற இடங்களில் மின்சாரத்தை சேமிக்க சோலார் ஆற்றலை பயன்படுத்த வேண்டும்’ என்பது உட்பட பள்ளிகளில் மின் சேமிப்பு குறித்து, அருவங்காடு புனித அன்னம்மாள் பள்ளி மாணவியர் விளக்கியிருந்தனர்.
புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து, ஊட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் விளக்கம் அளித்தனர். சின்னக் குன்னூர், கடநாடு, பில்லிக்கம்பை அரசுப் பள்ளி உட்பட மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் கண்காட்சியில் பங்கெடுத்திருந்தன.
அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குரிய தீர்வை, அறிவியல் மூலம் மாணவ, மாணவியர் விளக்கினர். தொடர்ச்சியாக நடந்த கருத்தரங்கிலும் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சாதிக்கும் மாணவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.
தீத்தடுப்பு உபகரணம் எங்கே?
கல்வித்துறை சார்பில், அவ்வப்போது அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. சம்மந்தப்பட்ட அரங்கில், ஏராளமான மாணவ, மாணவியர் வரிசையாக நின்று தங்களது படைப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர், ‘பேட்டரி’ உதவியுடன் மூலம் விளக்கு எரிய வைப்பது என, பேட்டரி மின்சாரத்தை கையாள்கின்றனர்.
சில சமயங்களில், ஒயர்கள் கருகுவது உட்பட மின் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. கருகும் வாசனையை வைத்து, ஏற்பட்டாளர்கள், ஆசிரியர்களை உஷார்படுத்துகின்றனர். ஒரு வேளை தீ விபத்து எதுவும் நேரிட்டால், அங்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை என்ற நிலையில், இத்தகைய அரங்குகளில் தீத்தடுப்பு உபகரணங்களை வைக்க வேண்டியது அவசியம்.

