"இன்றைய கட்டட முறை 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது"
"இன்றைய கட்டட முறை 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது"
UPDATED : நவ 01, 2014 12:00 AM
ADDED : நவ 01, 2014 11:41 AM
சென்னை: கற்களை அடுக்கி, கலவை பூசி, சுவர் கட்டும் இன்றைய முறையை, 3,000 ஆண்டுகளுக்கு முன் பெருங்கற்காலத்தில் கொண்டு வந்து விட்டனர். அவர்களின் கட்டடக் கலையைத்தான், இன்று மேம்படுத்தி பின்பற்றி வருகிறோம், என, தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குனர், சுப்ரமணியம் கூறினார்.
சென்னை தமிழ் வளர்ச்சிக் கழக வளாகத்தில் உள்ள, தொல்லியல் துறை கருத்தரங்கு கூடத்தில், தமிழகத்தில் இரும்பு காலத்தின் தோற்றமும், வளர்ச்சியும் என்ற தலைப்பில், அவர் ஆற்றிய உரை:தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில், 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய, பெருங் கற்காலம் குறித்து, அகழ்வாய்வு நடந்துள்ளது. இதில், அக்கால மக்கள் தனித் தனி குழுக்களாக வாழ்ந்துள்ளனர். அவர்களின் தொழில், வழிபாடு, மூதாதையர் வழிபாடு ஆகியவை தனித்தனியாக இருந்துள்ளன என, தெரிய வந்துள்ளது. இதற்கு, பல்வேறு ஆதாரங்கள் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.
தமிழகத்தில், ஜவ்வாது மலை உள்ளிட்ட பகுதிகளில் இவை கண்டெடுக்கப்பட்டு உள்ளன. தனித்தனியாக வாழ்ந்த குழுக்கள், குடிகள் என்றும், பல குடிகள் இணைந்து, இன குழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. பலம் வாய்ந்த குடிகள், பிற குடிகளை அடக்கி ஆட்சி செய்துள்ளன. ஒரு குடியைச் சேர்ந்தவர்கள், சகோதரர்கள் என்றும், அவர்களுக்குள் திருமணம் செய்யவில்லை. பிற குடிகளைச் சேர்ந்தவர்களை மணந்துள்ளனர்.
இதனால், இரு வேறு குடிகளுக்கு இடையே கலாசார உறவுகளும், தொழில் முறைகளும் பரிமாறப்பட்டு உள்ளன. இனக் குழுக்களுக்கு தலைவன் இருந்துள்ளான். இறந்தவர்களை அடக்கம் செய்து, பெருங்கற்கள் மூலம் ஈமச் சின்னங்களை எழுப்பி உள்ளனர். இந்த சின்னங்கள், ஒவ்வொரு குடியின் பழக்கத்துக்கு ஏற்ப இருந்துள்ளது. இந்த ஈமச் சின்னங்களில் நுழைவாயில், சுற்றுப் பகுதி, கருவறை என அமைத்துள்ளனர்.
இந்த கட்டட அமைப்பு, இன்றைய கட்டட அமைப்பின் மூல ஆதாரம். அடுக்கப்பட்ட கற்கள், விழாமல் இருக்க மண் கலவையைப் பயன்படுத்தி உள்ளனர். பெருங்கற்கால ஈமச் சின்னங்களை ஒத்தே, இன்றைய கோவில்கள் உள்ளன. அது போன்ற வடிவமைப்பையே, பிற்காலத்தில் பின்பற்றி வருகிறோம். ஈமச் சின்னத்தில், மூதாதையர் உயிர் வாழ்வதாகவும், அதற்கு படையல் படைத்தும் வழிபட்டு உள்ளனர். அதேபோல், இன விருத்திக்கு மூல ஆதாரமான பெண்ணை, தெய்வமாக வழிபட்டுள்ளனர். இதற்காக, பெண் உருவில், கற்சிற்பங்களையும் வடிவமைத்து உள்ளனர்.
பிறப்பு - இறப்பு - மறு பிறவி என்ற கருத்தை, பெருங்கற்காலம் தொட்டு நம்பி வருகின்றனர். பிற்காலத்தில், அனைத்து மதங்களும், இந்த கருத்தை ஏற்றுள்ளன. பெருங்கற்கால வாழ்வியல் முறைகளுக்கு, சங்க இலக்கியங்களில், பல்வேறு சான்றுகள் சொல்லப்படுகின்றன. இவ்வாறு அவர் உரையாற்றினார்.
தொல்லியல் துறை துணைக் கண்காணிப்பாளர் வசந்தி மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள், ஆய்வுத்துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

