சென்னை பல்கலை உலகளவில் 200 பல்கலைகளுள் ஒன்றாக வர வேண்டும்: யு.ஜி.சி. துணைத் தலைவர்
சென்னை பல்கலை உலகளவில் 200 பல்கலைகளுள் ஒன்றாக வர வேண்டும்: யு.ஜி.சி. துணைத் தலைவர்
UPDATED : நவ 01, 2014 12:00 AM
ADDED : நவ 01, 2014 11:45 AM
சென்னை: சென்னை பல்கலை, உலகளவில், 200 பல்கலைகளுள் ஒன்றாக வர வேண்டும் என, சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில், பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) துணைத் தலைவர் தேவராஜ் வலியுறுத்தினார்.
சென்னை பல்கலையின், 157வது பட்ட மளிப்பு விழா, பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. தமிழக கவர்னரும், பல்கலை வேந்தருமான ரோசய்யா, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த ஆண்டு, தொலைதூரக் கல்வி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும், 60,228 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. இதில், 39,630 பேர் மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில், 213 பி.எச்டி., மாணவர்கள், 115 ரேங்க் பெற்ற மாணவர்கள் உட்பட, 400 மாணவர்களுக்கு, பட்டங்களை கவர்னர் வழங்கினார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜ் பேசியதாவது: சென்னை பல்கலை, விரைவில், சிறப்பு பல்கலைகளில் ஒன்றாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, 150 கோடி ரூபாய் மானியத்தை பெறும். மேலும் பாரம்பரியத்திற்காக, 10 கோடி ரூபாய் ஊக்கத்தொகையையும் பெறும்.
இந்த பல்கலை, தொடர்ந்து வளர்ந்து, சிறப்பாக பணியாற்றி, உலகளவில், சிறந்த, 200 பல்கலைகளில் ஒன்றாக வர வாய்ப்பு உள்ளது. கல்வி என்பது, பட்டம் பெறுவதுடன் நின்று விடுவதில்லை; தொடர்ந்து, அவர்கள் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். படித்து முடிக்கும் மாணவர்கள், தங்களுக்காக மட்டும் அந்த அறிவை பயன்படுத்தாமல், சமூக மேம்பாட்டிற்கும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சென்னை பல்கலை பதிவாளர் டேவிட் ஜவகர், அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

