மாற்று வேலை நாளாக சனிக்கிழமை பள்ளி செயல்பட்டால் கட்டாயம் சத்துணவு வழங்க உத்தரவு
மாற்று வேலை நாளாக சனிக்கிழமை பள்ளி செயல்பட்டால் கட்டாயம் சத்துணவு வழங்க உத்தரவு
UPDATED : நவ 01, 2014 12:00 AM
ADDED : நவ 01, 2014 12:00 PM
மதுரை: மதுரையில் மாற்று வேலை நாளாக சனிக்கிழமையன்று பள்ளி செயல்பட்டால், அன்று கட்டாயம் சத்துணவு வழங்க வேண்டும் என கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
அக்.,22 தீபாவளியை முன்னிட்டு அக்.,21ல் தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதை ஈடுசெய்யும் வகையில் அக்.,25 சனியன்று மதுரையில் பள்ளிகள் செயல்பட்டன. அன்று மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "சனியன்று பள்ளிகள் செயல்பட்டால் சத்துணவு வழங்கக்கூடாது என உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். கலவை சாதம் முறை வந்தவுடன் ஒவ்வொரு நாளும் ஒரு மெனு தயாரிக்கப்படும். சனியன்று என்ன சாதம் வழங்க வேண்டும் என்று மெனு இல்லை" என கூறியிருந்தார். இதற்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி உட்பட ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழ் அக்.,27ல் செய்தி வெளியிட்டது.
அதன் எதிரொலியாக, நகராட்சி மற்றும் யூனியன் கமிஷனர்கள், மாநகராட்சி கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு கலெக்டர் சுப்ரமணியன் அனுப்பிய உத்தரவு: மாவட்டத்தில் 1,444 சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு மதிய உணவாக கலவை சாதங்கள் மற்றும் மசாலா முட்டைகள் அனைத்து நாட்களிலும் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் எவ்வித புகாரின்றியும் செயல்பட வேண்டும்.
பண்டிகை, மழை, வெள்ளம் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு, அதற்கு ஈடாக சனியன்று பள்ளி செயல்பட்டால், அந்நாளுக்குரிய கலவை சாதம் மாணவர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

