உருளை சறுக்கு விளையாட்டில் சாதிக்கும் 13 வயது மாணவர்!
உருளை சறுக்கு விளையாட்டில் சாதிக்கும் 13 வயது மாணவர்!
UPDATED : நவ 02, 2014 12:00 AM
ADDED : நவ 02, 2014 10:50 AM
சென்னை: ஆலந்தூரை சேர்ந்தவர் ஜெனில், 13; உருளை சறுக்கு வீரர். மீனம்பாக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று, 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார்.
தன் லட்சியம் குறித்து, ஜெனில் கூறியதாவது: அப்பா அருள், காவல் துறையில் பணிபுரிகிறார். அம்மா இல்லத்தரசி. நான், கடந்த, 2007ம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கும் போது, உருளை சறுக்கு (ஸ்கேட்டிங்) பயிற்சியில் ஈடுபட துவங்கினேன். பயிற்சி துவங்கி, ஒரு ஆண்டில் அதாவது, 2008ம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த, மாநில அளவிலான உருளை சறுக்கு போட்டியில் பங்கேற்று, வெள்ளி பதக்கம் வென்றேன். அன்றுதான் என் பதக்க பட்டியல் துவங்க ஆரம்பித்தது. கடந்த, 2009ல், காரைக்காலில் நடந்த, தென்மண்டல உருளை சறுக்கு போட்டியில் பங்கேற்றேன்.
அதில், இரண்டு தங்க பதக்கமும், தனிநபர் சாம்பியன் பட்டமும் வென்றேன். அன்று முதல் தனிநபர் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து வென்று வருகிறேன். கேரள மாநிலம் திருச்சூரில், 2010ல் நடந்த தென்மண்டல பள்ளி அளவிலான போட்டியில், தோல்வி அடைந்தேன். அதன்பிறகு, அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து, தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பங்கேற்று தங்க பதக்கம் வென்று வருகிறேன். என் லட்சியம், சர்வதேச போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும்; அதன் மூலம் தமிழகத்துக்கும், தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

