sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பல்கலை பல் ஊடக மையம் செய்வது என்ன?

/

பல்கலை பல் ஊடக மையம் செய்வது என்ன?

பல்கலை பல் ஊடக மையம் செய்வது என்ன?

பல்கலை பல் ஊடக மையம் செய்வது என்ன?


UPDATED : நவ 02, 2014 12:00 AM

ADDED : நவ 02, 2014 12:57 PM

Google News

UPDATED : நவ 02, 2014 12:00 AM ADDED : நவ 02, 2014 12:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் அத்தனை பேருக்குள்ளும், நாம் வளர்ந்துவிட்டோம் என்ற எண்ணம், இழையோடும்.

கல்லூரி வளாகங்களில் கிடைக்கும், நட்பு, சுதந்திரம், பரந்துபட்ட கல்விவெளி, சமூக பங்களிப்பு, வேலை தேடும் முனைப்பு, குடும்பம் பற்றிய சிந்தனைகள் என, வெவ்வேறு நிறங்களில் எண்ணங்கள் முளைவிடும், அந்த பருவத்தில். அந்த காலகட்டங்களில் கற்பனைகள் சிறகு தைக்கும்; கலைகள் எல்லாம் உறவு வைக்கும். அந்த பருவத்தினரை, வெறும் புத்தகங்களால் மட்டுமே அடைகாத்துவிட முடியாது.

கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் குதூகலம் கலந்து, சான்றுகள் பல அடுக்கி, செய்முறையின் ஊடே, பாடத்தை நகர்த்தி, தன் பக்கம், அவர்களை ஈர்க்க நினைக்கும் ஆசிரியர்களே, பெரும்பாலும் வெற்றி பெறுகின்றனர். ஆயினும், இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தில், மாணவர்களுக்கு பாடம் எடுப்பது, பெரும்பாலான பேராசிரியர்களுக்கு சிரமமாக உள்ளதாகவே, கூறப்படுகிறது.

புதுசா யோசிக்கணும்...: அதற்கு மாற்றாக, பாடங்களை, அனுபவம் மிக்க பேராசிரியர்களை கொண்டு கற்பித்து, அதை, அப்படியே வீடியோவாக பதிவு செய்து, அவர் போதிப்பதை, தட்டச்சு செய்து, அவர் சொல்லும் விளக்கங்களுக்கு, அனிமேஷன், வீடியோ முறையில் விளக்கம் கொடுத்து, வகுப்பறையில் திரையிட்டு விளக்கினால்... அதை, இணையதளத்தில் பதிவேற்றினால்... தொலைக்காட்சியில் ஒலிபரப்பினால்... நன்றாக இருக்குமே!

அதைத்தான், கல்வி பல் ஊடக ஆராய்ச்சி மையங்கள் செய்து கொண்டிருக்கின்றன. இந்த பணிக்காக 22 ஆய்வு மையங்கள், இந்தியா முழுவதும் செயல்படுகின்றன. தமிழகத்தில் இரண்டு மையங்கள் உள்ளன. அவை, மதுரை, காமராஜ் பல்கலை பல் ஊடக ஆய்வு மையம் மற்றும் சென்னை, அண்ணா பல்கலை பல் ஊடக ஆய்வு மையம் ஆகியவை.

சென்னை, அண்ணா பல்கலை பல் ஊடக ஆய்வு மையம், கடந்த, 1985ம் ஆண்டு துவக்கப்பட்டு, பல்வேறு படிநிலைகளை கடந்து, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் இயக்குனர், கவுரியிடம் பேசியபோது, அவர் கூறியதாவது: இந்த மையம், கடந்த 1985ம் ஆண்டு ஒலிக்காட்சி ஆய்வு மையமாக (ஆடியோ விஷுவல் ரிசர்ச் சென்டர்) துவக்கப்பட்டது. அதை துவக்கியது பல்கலைக்கழக மானிய குழு. அதன் நோக்கம், கல்வி தொலைக்காட்சி ஒலிபரப்பின் வழியாக, அறிவியல் தொழில்நுட்ப அறிவை, சமுதாயத்தில் பரவச் செய்வது. அந்த வகையில், பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளையும், சமூக பயன்பாட்டு நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கி வருகிறது. எய்ட்ஸ் குறித்து, தயாரித்து வழங்கிய நிகழ்ச்சிகளுக்காக, இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால், சிறந்த மையத்திற்கான தேசிய விருதும் பெற்றிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காட்சிப்படுத்திய மாணவர்கள்: வாருங்கள்! சொன்னால் புரியாது, பார்த்தால்தான் புரியும், என்றவாறே நம்மை அழைத்தார், அம்மையத்தின் பொறுப்பாளர் ராஜேஷ். அவர் அழைத்து சென்ற இடம், நிகழ்ச்சி தயாரிப்பு கூடம். அங்கு... ஒளிவெள்ளத்தை பாய்ச்சியபடியே, கண்விழித்து கொண்டிருந்தன, விளக்குகள். ஊழிக்காலத்து கண்ணனின் வாய் போல, அங்கு நடப்பவற்றை விழுங்கி கொண்டிருந்தன, மூன்று கேமராக்கள். அவற்றில் ஒன்றை, பிடரி பிடித்து, அடக்கி வழி நடத்திக்கொண்டிருந்தார் ஒரு ஒளிப்பதிவாளர்.

அவரின் செய்கைகளை, கவனித்தும், விளக்கம் கேட்டும் புரிந்துகொண்டிருந்தனர் சில மாணவியர். இன்னும், இரு கேமராக்களை இயக்கி, வித்தியாசமாக கோணம் வைத்து, காட்சிகளால் தீனிபோட்டுக் கொண்டிருந்தனர். அடுத்த அறை... பதியப்படும் காட்சி களை வாங்கி, சேமித்துக் கொண்டு, அவற்றை, நெறியாள்கையுடன், எடிட் செய்து கொண்டிருந்தனர் சிலர்.

அவர்கள், வீடியோ காட்சிகளை எடிட் செய்தபின், அது மற்றொரு அனிமேஷன் கூடத்திற்கு செல்கிறது. அங்கு, பேராசிரியர் தரும் விளக்கங்களுக்கு ஏற்ப, அனிமேஷன் காட்சிகளை உருவாக்கி கொண்டிருந்தனர். அடுத்து ஒருவர்... அவர், ஆசிரியர் நடத்தியவற்றை காதில் வாங்கி, தட்டச்சு செய்து, அவற்றை மின் கட்டுரையாக மாற்றிக்கொண்டிருந்தார். பின், இசையமைப்பு கூடம். அங்கு, இசை சேர்ப்பு நடக்கிறது.

நிறைவாக, ஒரு பாடம், அரை மணிநேரத்திற்கு, வரையறுக்கப்பட்டு, (எடிட்), அதில் காட்சிகளாகவும், மின் கட்டுரையாகவும், ஒலி வடிவமாகவும் என, பல்வேறு படிநிலைகளில் பதிவேற்றம் செய்யப்பட்டு நிறைவுறுகிறது.

என்ன தான் நடக்குது?: ஒரு சுற்றுலா பயணியை அழைத்து செல்லும் வழிகாட்டி போல, தயாரிப்பு கூடங்களுக்கு அழைத்து சென்று திரும்பிய ராஜேஷ், சொன்ன செய்திகள்தான் இவை...: பல்கலைக்கழக மானிய குழு மூலம், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு தரமான, மின் ஊடகங்களின் வழியாக, தரமான பாடங்களை, மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக, கல்வி பல் ஊடக ஆய்வு மையங்களை உருவாக்கி உள்ளது.

ஐநூறுக்கும் மேற்பட்ட, தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், இந்த கல்வி சேவைக்காக பணியாற்றுகின்றனர். இந்த ஆய்வு மையங்கள் மூலம், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடங்களை தயாரித்து, எப்போதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், சேமித்து வைத்துள்ளோம்.

எங்கள் தயாரிப்பில், அண்ணா பல்கலையின் ஊடகவியல் மாணவர்களும் நேரடியாக பங்கேற்று, தயாரிப்பு சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்கின்றனர்.

யாருக்காக? எப்படி?: இந்த பாடங்கள், இளநிலை பட்டம் படிக்கும், கலை அறிவியல் மாணவர்களுக்காக, ஒவ்வொரு பாடத்திற்கும், அரை மணிநேர அளவில் ஒருவரால் போதிக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. ஒரு பாடம், 30 பாடங்களாக தயாரிக்கப்பட்டு இருக்கும். அவை,

வியாஸ், தூர்தர்ஷன் முதல் அலைவரிசை தொலைக்காட்சிகள், ஞானவாணி என்ற, வானொலி, www.cecugc.nic என்ற, இணையதளம் ஆகியவற்றின் மூலம் ஒலிபரப்பப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு, infor.cec@nic.in என்ற, மின்னஞ்சல் வழியாகவோ, 044--22399106,- 22300105, -22300106 ஆகிய தொலைபேசி எண்களின் வழியாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ராஜேஷ் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us