பொள்ளாச்சி ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியல் மாணவர்கள் அறிந்துகொண்டது...
பொள்ளாச்சி ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியல் மாணவர்கள் அறிந்துகொண்டது...
UPDATED : நவ 03, 2014 12:00 AM
ADDED : நவ 03, 2014 11:55 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில், பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடந்தது. அதில் கோவை பி.எஸ்.ஜி., சர்வஜனா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பொதுத்தேர்வுக்கு தயாரித்தல் குறித்து டிப்ஸ் வழங்கினர்.
ரஞ்சிதம், தமிழ்: மனப்பாட பகுதி செய்யுள்களை சரியான முறையில் சீர்பிரித்து எழுத கற்றுக்கொள்ள வேண்டும். அணி, பண்புத்தொகை, வினைத்தொகை ஆகியவற்றை திரும்ப திரும்ப பயிற்சி செய்ய வேண்டும். பழைய வினாத்தாள்களை சேகரித்து வைத்துக்கொண்டு, அதிலுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை பயிற்சி செய்ய வேண்டும். இரண்டாம் தாளை பொறுத்தவரை, கேள்விகளை நன்கு புரிந்து விடையளிக்க வேண்டும்.
துணைப்பாடத்தில் இருந்து, கதை, நாடகம் அல்லது கற்பனை என என்ன வடிவத்தில் பதில் அளிக்க கேட்டுள்ளனர் என பார்த்து விடையளிப்பது முக்கியம். இலக்கிய நயம் பாராட்டுதல் பகுதியில் பாரதியார், பாரதிதாசன், கவிமணி மற்றும் நாமக்கல் கவிஞர் ஆகியோரது பாடல்கள்தான் கேட்கப்படும் என்பதால் அவற்றை நன்கு படித்துக் கொள்ளலாம்.
சாந்தா, ஆங்கிலம்: பாட புத்தகங்களில் உள்ள பயிற்சிகளை திரும்ப திரும்ப பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், பொதுத்தேர்வில் கேட்கப்படும் 90 சதவீத கேள்விகள் அவற்றில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மேலும், முந்தைய ஆண்டுகளின் கேள்வித்தாள்களை பயிற்சி செய்வது, இலக்கண பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்தி படிப்பது, ஆங்கில புத்தகங்களை வாசிப்பது போன்றவை மாணவர்களுக்கு பெரிதும் உதவும்.
தட்சிணாமூர்த்தி, கணிதம்: தினசரி கணக்குகளை பயிற்சி செய்தாக வேண்டும். பார்முலாக்களை மனப்பாடம் செய்து விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதும்போது, நேரம் குறைவாக தேவைப்படும் கணக்குகளை தேர்ந்தெடுத்து விடையளிக்க வேண்டும். இவ்வாறு நேரத்தை சேமித்து, தேர்வு எழுதி முடித்தவுடன், விடைகளை சோதிக்க அரைமணி நேரத்தை ஒதுக்க வேண்டும். கூட்டல், கழித்தலில் பிழை இருந்தால், அதை திருத்திக்கொள்ள இது கைகொடுக்கும். இன்றுமுதல், தேர்வு வரை மூன்று மாதங்களும் தினசரி அரைமணி நேரம் கணித பாடத்துக்கு ஒதுக்கினால், நிச்சயம் நூறு சதவீத மதிப்பெண் பெற முடியும்.
சங்கர் கணேஷ், இயற்பியல்: இயற்பியலில் பகுதி ஆ-வில் இருந்து தான், 45 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதுதான் அதிக மதிப்பெண் உள்ள பகுதி என்பதால், அதற்கு முதலில் விடையளிப்பது நல்லது. ஒன்றுக்கொன்று தொடர்புள்ள இருவேறு பாடங்களை ஒப்பிட்டு படித்தால், சுலபமாகவும் இருக்கும்; மறக்கவும் மறக்காது. தேர்வின் போது கண்டிப்பாக நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும். அதற்கு தினமும் வீட்டில் பயிற்சி செய்ய வேண்டும். ஒரு மதிப்பெண் வினாக்கள் தான் நூறு சதவீதம் மதிப்பெண் பெறுவதை உறுதிப்படுத்தும் என்பதால், அதற்கென சிறப்பு கவனம் செலுத்தி படிப்பது அவசியம்.
சிவக்குமார், வேதியியல்: பிளஸ் 2 வேதியியல் பாடம் மூன்று பிரிவுகள், 22 பாடங்களை கொண்டிருப்பதால் மாணவர்களுக்கு மலைப்பு ஏற்படுத்துவதாக தோன்றும். ஆனால் பாடத்தை புரிந்து கொண்டு, ஆர்வத்துடன் படித்தால் மிக எளிது. இதற்கு, மூன்று விஷயங்கள் முக்கியம். அவை திட்டமிடுதல், அதை செயல்படுத்துதல், அதற்கான தன்னம்பிக்கை ஆகியவைதான். புத்தகத்தில் இருந்து குறிப்புகளை எடுத்து படிப்பதை வழக்கமாக்கி கொண்டால், அது மேல்படிப்பின்போதும் உதவும்.
ஸ்ரீ சுதா, உயிரியல்: தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளை அடக்கியது உயிரியல் பாடம். இவற்றில் செய்முறை பயிற்சி தேர்வு எழுதுவதற்கும், தேர்வுக்கான தயாரிப்பு, செய்முறைத் தேர்வுக்கும் உதவும். பல்வேறு சுழற்சி முறைகள் குறித்து நன்கு தயாரித்து கொள்வது அவசியம். மாணவர்களுக்கு எந்த பாடம் கடினம் என தோன்றுகிறதோ, அதை முதலில் படிக்க வேண்டும். அதிகாலை 4.00 மணிக்கு எழுந்து படிக்க பழகிக்கொண்டால், அது மனப்பாட திறனை வளர்க்கும்.
இதற்காக ஆரோக்கியத்திற்கு அவசியமான தூக்கத்தை இழந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான, அறிவார்ந்த உழைப்பு இருந்தால், எந்த மாணவரும், அனைத்து பாட்டத்திலும் நூறு சதவீத மதிப்பெண் பெறமுடியும்.
அனிதா, கம்பியூட்டர் சயின்ஸ்: இப்பாடத்தில் 75 சதவீத மதிப்பெண்களுக்கு சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும். இதில், ஒ.எம்.ஆர்., முறையில், கட்டத்தை நிரப்ப, பென்சிலுக்கு பதில் பேனாவை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பிழை ஏற்பட்டால் திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லை என்பதை மனதில் கொண்டு கவனத்துடன் விடையளிக்க வேண்டும்.
ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு என கிடைக்கும் புத்தகங்களை கொண்டு தயார் செய்து கொள்வது முழு மதிப்பெண் பெற உதவும். புரொக்ராம் எழுத கேட்கப்படும் வினாக்கள், பெரும்பாலும் பாடப்புத்தகத்தின் பயிற்சி பகுதியில் இருந்துதான் கேட்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொண்டு அவற்றை பயிற்சி செய்வது அவசியம்.
மதியம் பிளஸ்2 ஆர்ட்ஸ் குரூப் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கிய டிப்ஸ்
விஜயலட்சுமி, கணக்குபதிவியல்: கேள்வியை நன்றாக புரிந்து படித்தால் மட்டுமே, சரியான விடையை அளிக்க முடியும். ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்துக்கும் பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான மதிப்பெண் பெற முடியும். ஐந்து மதிப்பெண் கேள்வியில் தியரி பகுதியில் எடுத்துக்காட்டுகள் கண்டிப்பாக எழுத வேண்டும். 12 மதிப்பெண் பகுதியில், தொடக்க முதல் கொடுத்து, இறுதிமுதல் மற்றும் லாப நட்டம் கண்டுபிடித்தல் பகுதி வினா கட்டாயம் கேட்கப்படும். மிக எளிமையான இப்பகுதியினை நழுவ விடக்கூடாது. கணக்குகளை மனதில் நன்றாக பதிய வைத்தால் கணக்கு பதிவியல் எளிமையான பாடம்தான்.
வணிகவியல்: வணிகவியலில் முதல் பாடத்தில் இருந்து மட்டும் 39 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும். நிறுமங்கள், கூட்டுறவு பாடங்களுக்கு முக்கியத்துவம் தந்து படிக்க வேண்டும். மாணவர்கள் தினமும் எழுதி பார்க்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதனால் தேர்வில் வேகமாக எழுத முடியும். ஒரு மதிப்பெண் கேள்விகள் 40, நான்கு மதிப்பெண் கேள்விகள் பத்து என அனைத்துக்கும் பதிலளிக்க முயற்சிக்க வேண்டும்.
வித்யா, பொருளியல்: பொருளியல் பாடத்தை கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதில்லை, இஷ்டப்பட்டு படித்தாலே போதும். பொருளியலில் உள்ள 12 பாடங்களை நன்றாக படித்தால் ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்துக்கும் பதிலளிக்க முடியும். 7,10,12 வது பாடங்களிலிருந்து கண்டிப்பாக 10 மதிப்பெண் கேள்விகள் இடம்பெறும். அதுபோல 3,4,8 பாடங்களில் இருந்து 20 மதிப்பெண் கேள்விகள் இடம்பெறும் இந்த பாடங்களுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் தந்து படிக்க வேண்டும். அதுபோல் எளிமையான வார்த்தைகளை கொண்டு பதிலளிக்க வேண்டும்.

