UPDATED : நவ 04, 2014 12:00 AM
ADDED : நவ 04, 2014 12:31 PM
வருஷநாடு: கடமலை-மயிலை ஒன்றிய பகுதியில் உள்ள மலைக்கிராம பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தாமதமாக வருகை தருகின்றனர். ரோடு மற்றும் பஸ் வசதி இல்லாததால் உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் மஞ்சனூத்து, அரசரடி, வெள்ளிமலை,பொம்முராஜபுரம், இந்திராநகர், காந்திக்கிராமம், சீலமுத்தையாபுரம் உட்பட 200க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. பள்ளி துவங்கப்பட்ட காலத்தில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக இருந்தது. சில கிராமங்களில் ரோடு மற்றும் பஸ் வசதியில்லாததால் ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நகர் பகுதிகளில் சேர்த்து விடுகின்றனர். இதனால் மலைக் கிராமங்களில் மாணவர்களின் சேர்க்கை படிப்படியாக குறைந்து சில பள்ளிகளில் 2, 9, 11 பேர் மட்டுமே படிக்கின்றனர். தலைமை ஆசிரியர்கள் மட்டும் பணி புரியக் கூடிய பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மீட்டிங் சென்று விட்டால் மாற்று ஆசிரியர்கள் நியமிப்பதில்லை.
ரோடு வசதி இல்லாத மலைக் கிராமத்தில் பெண் ஆசிரியைகளை நியமிப்பதால் அவர்களால் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை. மலைக் கிராமபகுதி மாணவர்களின் நலன் கருதி ரோடு மற்றும் பஸ் வசதியில்லாத கிராமங்களுக்கு வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மலைக் கிராமங்களில் பணியாற்றக் கூடிய ஆசிரியர்களுக்கு கூடுதல் மலைப்படி ஊதியம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடக்க கல்வி அலுவலர் வீராச்சாமி கூறுகையில், "மலைக்கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு தினந்தோறும் ஆய்வு செய்து வருகிறோம். அப்படி பணிக்கு செல்லக்கூடிய ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு செல்லாமல் இருந்தால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

