பிரான்ஸ் பல்கலையுடன் இணைந்து சட்டப் படிப்பு வழங்க புதுச்சேரி பல்கலை திட்டம்
பிரான்ஸ் பல்கலையுடன் இணைந்து சட்டப் படிப்பு வழங்க புதுச்சேரி பல்கலை திட்டம்
UPDATED : நவ 05, 2014 12:00 AM
ADDED : நவ 05, 2014 11:40 AM
புதுச்சேரி: பிரான்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மூன்றாண்டு சட்டப் படிப்பை அறிமுகப்படுத்த புதுச்சேரி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்கின்ற, இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன், கனடா போன்ற நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், கல்வி பயில செல்லுகின்றனர். வெளிநாட்டு படிப்பிற்கு அதிகரித்து வரும் வரவேற்பை கண்டு, இந்திய கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, மூன்றாண்டு படிப்புகளை வழங்கி வருகின்றன. இது ட்யூனிங் புரோகிராம் என, அழைக்கப்படுகிறது.
இதன்படி, இந்தியாவில் இரண்டு ஆண்டு படிக்கும் மாணவர்கள், வெளிநாட்டிற்கு சென்று ஓராண்டு படிக்க வேண்டும். அதேபோல், வெளிநாடுகளில் இரண்டாண்டு படிக்கும் மாணவர்கள், இந்தியாவிற்கு வந்து, மீதமுள்ள ஓராண்டு படிப்பை முடிக்க வேண்டும். இந்த வரிசையில், இந்தியாவில் உள்ள மற்ற கல்வி நிறுவனங்களுக்கு, புதுச்சேரி பல்கலைக்கழகம் முன்னோடியாக உள்ளது.
உலகில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள அதிக முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டுடன் அதிக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. பிரான்ஸ் சொர்பன் பல்கலைக்கழகம், லியான் பல்கலைக்கழகம், கிரனோபல், பர்தோ ஆகிய பல்கலைக்கழகங்களுடன் இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, மாணவர்கள் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அடுத்தக்கட்டமாக, வெளிநாட்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து, வரும் கல்வியாண்டு முதல், மூன்றாண்டு பி.எல்., சட்டப் படிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, பாரீஸ் சொர்பன் பல்கலைக்கழகத்துடன், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு, சொர்பன் பல்கலைக்கழகமும் இசைவு தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் இந்தியாவிற்கு வரும் சொர்பன் பல்கலைக்கழக உயர்மட்ட குழுவினர் முறைப்படி இந்த அறிவிப்பை வெளியிட உள்ளனர்.
இதுகுறித்து, புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளராக(பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பன்னீர்செல்வம் கூறும்போது, "இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு, ஆலோசனை வழங்குவதற்கு, இரண்டு நாடுகளின் சட்டங்களை நன்கு தெரிந்த சட்ட நிபுணர்கள் தேவைபடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டே, பி.எல்., மூன்றாண்டு சட்டப் படிப்பினை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. துணைவேந்தர் சந்திராகிருஷ்ணமூர்த்தி, தொலைநோக்கு பார்வையுடன், இந்த படிப்பினை கொண்டு வந்துள்ளார்.
இந்த பி.எல்., படிப்பு, இருநாட்டு சட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இருநாடுகளின் மாணவர்களும் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுவர். இரண்டு பல்கலைக்கழகங்களும், தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடும். இதன்மூலம், இருநாடுகளின் சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்வதோடு, வேலை வாய்ப்பினை பெறவும் வாய்ப்பாக அமையும்" என்றார்.

