UPDATED : நவ 06, 2014 12:00 AM
ADDED : நவ 06, 2014 12:28 PM
ஆனைமலை: கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிநீர், உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர பெற்றோர்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை அடுத்துள்ள கோட்டூர் பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளில், கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிப்பட்டணம், ஆழியாறு, பொன்னாம்மன் துறை, சங்கம்பாளையம், ரமணமுதலிபுதூர், பொங்காளியூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
புதர் மண்டி கிடக்கும் பள்ளி வளாகம்: இந்தப் பள்ளியின் சுற்றுப்புற சூழ்நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இங்குள்ள கழிப்பறையை சுற்றி புதர் மண்டி கிடக்கிறது. கழிப்பறைக்கு செல்லும் பாதையில் பாம்பு, கருந்தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த வாரம் மட்டும் 3 பாம்புகளை மாணவர்கள் அடித்து கொன்றுள்ளனர்.
தாகத்துக்கு தண்ணீர் இல்லை: இந்த பள்ளிக்கு போதிய குடிநீர் தொட்டிகள் இல்லை. இருக்கின்ற ஒரு சின்டெக்ஸ் தண்ணீர் டேங்க்கும் உடைந்துள்ளது. இதனால் தண்ணீர் சேமித்து வைக்க வழியின்றியுள்ளது. பள்ளியில் கடந்த சில மாதங்களாக கடுமையான குடிநீர் பிரச்னை நிலவுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மாணவர்கள் இடைவேளை நேரத்திலும், மதிய உணவு இடைவெளியிலும் குடிநீர் கேட்டு அருகில் ஓட்டல்கள், பேக்கரிகள், குடியிருப்புகளுக்கு அலைகின்றனர். அரசு, பள்ளிகளுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினாலும், மாணவர்களை குடிநீருக்கு இப்படி பரிதவிக்க வைப்பது நியாயமில்லை. எனவே குடிநீர் பிரச்னையை தீர்க்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
திறந்தே கிடக்கும் பள்ளி: இந்தபள்ளியில் 24 மணி நேரமும் அன்னியர்கள் உள்ளே வருவதும் செல்வதும் என உள்ளதால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் பள்ளியில் பசும்புற்கள் அதிகமாக பரவி கிடப்பதால் வெளியாட்கள் ஆடு மாடுகளை கொண்டு வந்து மேய்கின்றனர். மாணவர்கள் மதிய உணவினை மரத்தடியில் வைத்து உண்கின்றனர்.
இந்த பகுதி முழுவதும் மாடு ஆடுகளின் கழிவுகளாக உள்ளதால், மாணவர்கள் மதிய உணவினை சாப்பிட இடவசதியின்றி அவதிப்படுகின்றனர். பள்ளியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
’உரிய நடவடிக்கை எடுக்கபடும்’
பள்ளி தலைமையாசிரியர் நந்தகுமார் கூறுகையில், ”தற்போது மாணவர்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்து தரப்பட்டு வருகிறது. மாணவர்கள் சின்டெக்ஸ் டேங்கினை அடிக்கடி உடைத்து விடுவதால் குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது. பள்ளிக்கு நிரந்தர மேல்நிலை நீர்தேக்க தொட்டியிருந்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,” என்றார்.
வால்பாறை எம்.எல்.ஏ., ஆறுமுகம் கூறுகையில், ”கோட்டூர் பேரூராட்சிக்கு இதுவரையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். மாணவர்களின் குடிநீர் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

