குழந்தை தொழிலாளர் வயதுவரம்பை 14இல் இருந்து 18ஆக உயர்த்த வலியுறுத்தல்
குழந்தை தொழிலாளர் வயதுவரம்பை 14இல் இருந்து 18ஆக உயர்த்த வலியுறுத்தல்
UPDATED : நவ 07, 2014 12:00 AM
ADDED : நவ 07, 2014 11:14 AM
குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசார இயக்கத்தின், தேசிய அமைப்பாளர்கள் ஜோசப் விக்டர் ராஜ், பிரசார ஆலோசகர் ஆசி பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் கூறியதாவது: ஐ.நா., குழந்தை உரிமை மீதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு, 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், குழந்தை தொழிலாளர்கள் முறை இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
பிரதமரின் சொந்த மாநிலத்தில், 2.5 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, குழந்தை மற்றும் இளம்பருவ தொழிலாளர் மசோதா - 2012ஐ, சீராய்வு செய்து, திருத்தி வலுப்படுத்துவோம் என, பா.ஜ., அரசு அறிவித்துள்ளது.
ஆனால், 14 வயது வரை உள்ளோரை மட்டுமே தொழில்களில் ஈடுபடுத்த தடை கொண்டு வருகின்றனர்; இது சரியாக அமையாது. குழந்தை தொழிலாளர் என்பதற்கான வயது வரம்பை, 14 வயதில் இருந்து 18 வயதாக உயர்த்த வேண்டும். அவர்களுக்கு, பிளஸ் 2 வரை, கல்வியை கட்டாயமாக்க வேண்டும். அதற்கேற்ப, அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால், கடும் தண்டனை தர வேண்டும். மாவட்ட அளவில் மட்டுமின்றி, வட்டார, நகராட்சி அளவிலும் கண்காணிப்புக் குழுவை உருவாக்க வேண்டும்.
குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்து, மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களும் உருவாக்க வேண்டும். இதற்கான மாதிரி மசோதா ஒன்றை உருவாக்கி உள்ளோம்; மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

