மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க, விரைவில் தேசிய திறனறி திட்டம்!
மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க, விரைவில் தேசிய திறனறி திட்டம்!
UPDATED : நவ 11, 2014 12:00 AM
ADDED : நவ 11, 2014 10:43 AM
மைதானம், போதிய பயிற்சியின்மை, திறமை இருந்தும் தங்களுக்கான வாய்ப்பு கிடைக்காமல், பள்ளி மாணவர்கள் பலர், போட்டியின் ஆரம்ப நிலையிலேயே வெளியேறுகின்றனர். ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், நர்சரி பள்ளிகளின் மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.
அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கவும், இளம் வயதில் நல்ல போட்டியாளராக்கவும், தேசிய திறனறி திட்டம் என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இத்திட்டத்தில், முதல் கட்டமாக, எட்டு முதல் 12 வயதுடைய 75 ஆயிரம் மாணவ, மாணவியர், நாடு முழுவதும் கண்டறியப்படுவர்.
அவர்களுக்கு பயிற்சி வழங்க, தேசிய அளவிலான மைதானம், அடிப்படை கட்டமைப்பு வசதி, மாவட்டந்தோறும் விளையாட்டுக்கென தனி பள்ளி, அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள், நான்கு ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தப்படுவர்.
அரசு பள்ளி விளையாட்டு ஆசிரியர் ஒருவர் கூறும்போது, "சிறு வயதிலேயே விளையாட்டில் ஆர்வம், விதிமுறை, குறிப்புகளை மனதில் பதிய வைத்து, நல்ல மைதானங்களில் அனுபவமிக்கவர்களை கொண்டு பயிற்சி வழங்கினால், கிராமப்புற மாணவர்கள் பலர், தேசிய அளவிலான போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதற்கு, தேசிய திறனறி திட்டம் பெரிதும் உதவும்" என்றார்.

