UPDATED : நவ 13, 2014 12:00 AM
ADDED : நவ 13, 2014 01:05 PM
சென்னை: கலை, பண்பாட்டு துறை சார்பில் மாநில ஓவிய, சிற்ப கலைக் கண்காட்சி, ஜனவரியில் நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என, அத்துறை தெரிவித்து உள்ளது.
தமிழக கலை, பண்பாட்டு துறை சார்பில், தமிழ்நாடு ஓவிய நுண்கலை குழு மூலம், மாநில மரபு வழி மற்றும் நவீன பாணி பிரிவில் ஓவிய, சிற்ப, கலைக் கண்காட்சி நடத்தி, விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், 2015, ஜனவரியில், மாநில ஓவிய, சிற்ப கண்காட்சி மூலம், 40 கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் மூத்த கலைஞர்களுக்கு, 9,000 ரூபாய்; இளம் கலைஞர்களுக்கு, 3,500 ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்பும் கலைஞர்கள், தங்கள் புகைப்படத்துடன், சுயவிவரக் குறிப்பு, படைப்பின் தலைப்பு, படைப்பின் பெயர், தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன், ஓவியங்கள் அல்லது சிற்பங்களின் 10க்கு12 அங்குல அளவில் இரண்டு புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
புகைப்படங்கள் மற்றும் சுயவிவர குறிப்புகளை, இம்மாதம் 28ம் தேதிக்குள், ’ஆணையர், கலை, பண்பாட்டு துறை, தமிழ் வளர்ச்சிக் கழகம், 2ம் தளம், ஹால்ஸ் சாலை, எழும்பூர், சென்னை - 600008’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 044--28193195, 044--28192152 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

