UPDATED : நவ 14, 2014 12:00 AM
ADDED : நவ 14, 2014 11:46 AM
நிலக்கோட்டை: விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பதட்டம் நிலவுவதால் பள்ளிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவரால் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். வழக்கு பதிவு செய்த விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கொலை செய்த மாணவரை கைது செய்தார்.
நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்கு பின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ் அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தையடுத்து உடலை வாங்கிச் சென்றனர்.
விளாம்பட்டி, எத்திலோடு கிராமங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பள்ளிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எத்திலோட்டில் உள்ள மாணவரின் வீட்டிற்கு சென்ற திண்டுக்கல் எம்.பி., உதயகுமார் ஆறுதல் கூறியதோடு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

