சென்னை உயர் நீதிமன்றத்தில் 16 நீதிபதி பணியிடங்கள் காலி
சென்னை உயர் நீதிமன்றத்தில் 16 நீதிபதி பணியிடங்கள் காலி
UPDATED : நவ 17, 2014 12:00 AM
ADDED : நவ 17, 2014 11:56 AM
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓராண்டாக புதிய நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. தற்போது, நீதிபதிகள் பணியிடங்கள், 16 காலியாக உள்ளதால், அவற்றுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 60. இதை, 75 ஆக உயர்த்தவும், மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனாலும், அதற்கு முன், உயர் நீதிமன்றத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த, 2013 அக்டோபரில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புஷ்பா சத்தியநாராயணா, கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், மகாதேவன், வி.எஸ்.ரவி, சொக்கலிங்கம் என, ஏழு நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களில், ரவி, சொக்கலிங்கம் ஆகியோர் மாவட்ட நீதிபதிகளாக இருந்து, பதவி உயர்வு பெற்றவர்கள். மற்றவர்கள், வழக்கறிஞர்களாக இருந்து நீதிபதிகளாக வந்தவர்கள். இந்த ஏழு பேருக்குப் பின், 2013 டிசம்பரில், நீதிபதி வேலுமணி நியமிக்கப்பட்டார். அதன்பின், உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. 2013 டிசம்பரில், சிலரின் பெயர்கள், நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரைக்கப் பட்டாலும், அதற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அத்துடன், சிலர் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலே மனுத் தாக்கல் செய்தார். அதனால், அந்தப் பட்டியல் அப்படியே கைவிடப்பட்டது.
தற்போது, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.கே.கவுல் பதவியேற்று, நான்கு மாதங்கள் முடிவடைய உள்ளது. நீதிபதிகள் நியமனங்களை மேற்கொள்ள, பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த ’கொலிஜியம்’ முறை ரத்து செய்யப்பட்டு, ’தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணையம்’ அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டின் இரு சபையிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது. அரசியல் சட்ட திருத்த மசோதா என்பதால், சரிபாதி மாநிலங்களின் சட்டசபை யிலும், இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னரே, அமலுக்கு வரும்.
உடனடியாக...: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், பால்கனகராஜ் கூறும்போது, ”நீதித்துறை நியமனங்கள் ஆணையத்துக்காக காத்திருக்காமல், காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, தலைமை நீதிபதியிடம் கோரி உள்ளேன். வழக்குகள் தேக்கத்தை குறைக்க, உடனடியாக, காலியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,” என்றார்.
தலைமை நீதிபதிக்கு மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில், காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பக்கோரி, ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு, வழக்கறிஞர்கள் சங்கம் சார்பிலும், வேறு அமைப்புகள் சார்பிலும் மனுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.
வரும் 22ம் தேதி, நீதிபதி அக்பர்அலி, ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில், காலியிடங்களின் எண்ணிக்கை, 17 ஆக உயர்கிறது. அடுத்த ஆண்டிலும், ஐந்து நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர்.

