அரசு போக்குவரத்துக் கழக பணிகளுக்கு 3.32 பேர் விண்ணப்பம்
அரசு போக்குவரத்துக் கழக பணிகளுக்கு 3.32 பேர் விண்ணப்பம்
UPDATED : நவ 19, 2014 12:00 AM
ADDED : நவ 19, 2014 12:33 PM
மதுரை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் போன்ற பணிகளுக்கு 3.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக அரசு போக்கு வரத்துக் கழகங்களில் சமீபத்தில் பணிநியமன அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஓட்டுனர், நடத்துனர், இளநிலை உதவியாளர், தொழில் நுட்பவியலாளர் என பல தரப்பிலும் பணி நியமனம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முன்பு, வேலை வாய்ப்பு அலுவலக பதிவுதாரர் பட்டியல் பெறப்பட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் நடந்தது. இந்தமுறை, பதிவுதாரர் மட்டுமின்றி, பதிவு செய்யாத தகுதியுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
குவிந்த இளைஞர்கள்:
மாநில அளவில் 7 கோட்டங்களிலும் பல ஆயிரம் பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. போக்குவரத்து அலுவலகங்களில் இளைஞர் கூட்டம் திரண்டது. நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்றனர். மதுரை கோட்டத்தில் தற்போது வரை 30 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுள்ளன.
மாநிலத்தில் 3.32 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தன. நவ., 20 வரை விண்ணப்பங்கள் விற்பனையாகும். டிச., 8 வரை பூர்த்தியான விண்ணப்பங்கள் பெறப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் இருக்கும்போது ஒரு பணியிடத்திற்கு 5 பேர் வரை பட்டியல் அனுப்பி அதில் கல்வி, தொழில் தகுதிகள் மற்றும் பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்வர்.
வி.ஐ.பி.,க்கள் பரிந்துரை:
இப்போது ’ஓப்பன் டூ ஆல்’ என்ற வகையில் ஒவ்வொரு கோட்டத்திலும் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். எனவே பணியிட எண்ணிக்கைக்கு ஏற்ப பலரை ’பில்டர்’ செய்ய வேண்டும். அதற்கு தேர்வுக் குழு அமைக்கப்படலாம். அதன்பின், பணிநியமனம் நடக்கும்.
வேலை வாய்ப்பு பதிவு தேவையில்லை என்பதால், இதில் அரசியல் விளையாடும். வி.ஐ.பி.,க்களின் பரிந்துரை ஏற்கப்பட வாய்ப்புள்ளதால், அவர்களை இளைஞர்கள் ’துரத்த’ துவங்கி விட்டனர்.

