"புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாகவே, நாட்டின் வளர்ச்சியை நிலைநிறுத்த முடியும்"
"புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாகவே, நாட்டின் வளர்ச்சியை நிலைநிறுத்த முடியும்"
UPDATED : நவ 23, 2014 12:00 AM
ADDED : நவ 23, 2014 12:37 PM
கோவை: பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாகவே, நாட்டின் வளர்ச்சியை நிலைநிறுத்த முடியும் என, சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், ஈச்சனாரி ரத்தினம் பொறியியல் கல்லுாரியும் இணைந்து, 22வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் அறிவியல் கண்காட்சி கல்லுாரி அரங்கில் நடந்தது. கண்காட்சி மற்றும் மாநாட்டை, முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி துவக்கிவைத்தார்.
சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தலைமை வகித்து பேசியதாவது: அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, இன்று பல புதிய கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. அறிவியல் பாடத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்வது அவசியம். பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாகவே நாட்டின் வளர்ச்சியை நிலைநிறுத்த முடியும். புதிய சிந்தனைகள் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அவசியம்.
இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் முன்னோடி நாடாக திகழ்கிறது. இதுபோன்ற கண்காட்சிகள், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர ஊன்றுகோலாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், தமிழக அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் நடராஜன், இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து, மாணவர்களை சந்தித்து, நாட்டின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி விவாதித்தார். விழாவில் ரத்னம் குழுமத்தின் தலைவர் மதன் செந்தில், முதன்மை செயல் அதிகாரி மாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கண்காட்சியில், 200 பள்ளி - கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
