தினமலர் ஜெயித்துக்காட்டுவோம்: சென்னைப் பல்கலையில் அலைகடலென திரண்ட மாணவர்கள்
தினமலர் ஜெயித்துக்காட்டுவோம்: சென்னைப் பல்கலையில் அலைகடலென திரண்ட மாணவர்கள்
UPDATED : நவ 23, 2014 12:00 AM
ADDED : நவ 23, 2014 02:57 PM
தினமலர் நாளிதழ், டி.வி.ஆர்., அகாடமி சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக, ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
சென்னை பல்கலைக் கழக நுாற்றாண்டு விழா அரங்கில், நேற்று, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடந்தது.
அரங்கம் நிரம்பியது: காலையில், ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கும்; மதியம், தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கும், தனித்தனியே நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக, ஜெயித்துக் காட்ட திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் அதிகாலையிலே மாணவ, மாணவியர் அரங்கில் குவிந்தனர்.
காலை, 7:00 மணிக்கு, மாணவர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும், புளூ பிரின்ட், ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு எழுதிய, ஜெயித்துக் காட்டுவோம் புத்தகம், நோட்டு, பேனா, மாதிரி வினாத்தாள், ஆகியவை வழங்கப்பட்டன.
மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில், அரங்கம் நிரம்பியது. அதன்பின், மாணவ, மாணவியர் அரங்கிற்கு வெளியே போடப்பட்டிருந்த பந்தலின் கீழ் அமர வைக்கப்பட்டனர். காலை, 9:00 மணிக்கு, முதல் நிகழ்ச்சி துவங்கியது. அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மேனகா, சாந்தி, ஆகியோர், அறிவியல் பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவது எப்படி என விளக்கினர்.
அவர்களைத் தொடர்ந்து, ஆசிரியர் கோபிராதா, ஆங்கிலப் பாடத்திலும்; ஜெயந்தி, கணிதப் பாடத்திலும்; சுவர்ணாம்பிகை, சந்திரகலா ஆகியோர் அறிவியல் பாடத்திலும்; சுப்புலட்சுமி தமிழ் பாடத்திலும், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவது எப்படி என விளக்கினர்.
மாணவர்கள் ஆர்வம்: ஆசிரியர்கள் கூறியதை, மாணவ, மாணவியர் ஆர்வமுடன் குறிப்பெடுத்துக் கொண்டனர். ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியை, டி.ஜே., தொழில்நுட்பக் கல்லுாரி, தங்கவேல் பொறியியல் கல்லுாரி, சென்னை தொழில் நுட்பக் கல்லுாரி, திருப்பாச்சூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி, பெரிக் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் பூர்விகா மொபைல்ஸ் நிறுவனங்கள், தினமலர் நாளிதழுடன் இணைந்து வழங்கின.
படிப்பு விஷயத்தில் பசித்திருங்கள்: படிப்பதில் பசித்திருக்கும் புலியாக இருங்கள், கவனத்தை ஒருமுகப்படுத்தி, பசித்து, தனித்து, விழித்திரு. யார் தன் திறமையின் சிகரத்தை தொடுகிறானோ, அவன்தான் சிகரத்தை தொட்டவன். படிப்பு என்று வரும்போது, சுயநலமாக இருங்கள். அடுத்தவருடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். நம் இலக்கு எதுவோ, அதை அடைய வேண்டும்.
ஒரு நாட்டில், பூனைகளுக்கு இடையே சண்டை போட்டி நடந்தது. இதில், சோமாலியா நாட்டை சேர்ந்த, பசியால் வாடி மெலிந்திருந்த பூனை கலந்து கொண்டது. இப்பூனை அனைத்து நாட்டு பூனைகளையும் தோற்கடித்தது. இறுதிப் போட்டியில், அமெரிக்க பூனையுடன் மோதும் நிலை ஏற்பட்டது. சோமாலியா நாட்டு பூனை திறமை அறிந்த, அமெரிக்க பூனை, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது.
அதன்படி சோமாலியா பூனையை சந்தித்து பேசும்போது, "நாம் சண்டையிட்டு இறக்க வரவில்லை. மக்களை மகிழ்விக்க வந்துள்ளோம். முதலில் விளையாடுவோம். பின்னர் போட்டியிடுவோம். எனவே, என்னை கொன்று விடாதே" என்றது. அதற்கு பதில் அளித்த சோமாலியா பூனை, "நீ ஆள் தெரியாமல் வந்து பேசுகிறாய். நான் பல நாள் பட்டினி கிடக்கிற புலி; பூனை அல்ல; எழுந்து ஓடிவிடு" என்றது. அதேபோல், நீங்களும் படிப்பு விஷயத்தில், பசித்திருக்கும் புலியாக இருங்கள்.
- பேராசிரியர் பர்வீன் சுல்தானா
கடைசி நேர விவாதம் வேண்டாம்: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும், வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாதவர்கள், பாலிடெக்னிக் கல்வியை தொடர முயற்சிக்க வேண்டும். அது, பிற்காலத்தில் பொறியியல் படிக்க உறுதுணையாக இருக்கும். தேர்வு நாளில், இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாவே, தேர்வு அறைக்கு செல்ல வேண்டாம்; ஒரு மணி நேரத்திற்கு முன் செல்வது நல்லது.முன்னதாகவே செல்லும் மாணவர்கள், மற்ற மாணவர்களிடம் சந்தேகம் கேட்பதோ, வினாத்தாள் குறித்து ஆலோசனை கேட்பதோ தவறு; அப்படி கேட்பதால் பதற்றமும், குழப்பமும் ஏற்படும்.
தேர்வு முடிந்த பின், மற்றவர்களுடன் விவாதித்தல் கூடாது. அப்பழக்கம், அடுத்துவரும் தேர்வை எதிர்கொள்வதற்கு எதிராக அமையும். மாணவர்கள் முக்கியமாக செய்யக்கூடாத, நினைக்க கூடாத ஒன்று, பிட் அடிப்பது. எக்காரணம் கொண்டும், பிட் காகிதம் கொண்டு செல்ல வேண்டாம். அந்த எண்ணம், கடைசி வரை, குறுக்கு வழிக்கு தான் அழைத்து செல்லும். அது, நிரந்தரமானதல்ல. நன்றாக எழுதிய மாணவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் எழக் கூடாது. மனித உயிர் விலைமதிப்பற்றது. படிப்பு என்பது, மதிப்பெண்ணுக்கானது மட்டுமல்ல, அறிவு வளர்ச்சிக்கானது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
- கல்வியாளர் ரமேஷ் பிரபா
பெற்றோர், ஆசிரியர் வற்புறுத்தலால் வந்தேன். நிகழ்ச்சி முடிந்த பின், பெரிய அளவில் தன்னம்பிக்கை வந்துள்ளது. என்னால் சாதிக்க முடியும் என்ற உணர்வை ஊட்டிய தினமலருக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி.
- வைஷ்ணவி, சாந்தோம்
இந்த நிகழ்ச்சி மூலம் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் விவரத்தை, தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. நேர மேலாண்மை குறித்து, ஆசிரியர்கள் விளக்கியது, மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
- கோகுல், பெரம்பூர்
ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு இப்போது வந்து செல்கிறேன். பிளஸ் 2 படிக்கும்போதும் வருவேன். காரணம், அந்த அளவுக்கு, இந்நிகழ்ச்சி என் படிப்பிற்கு உறுதுணையாக உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
- ரேஷ்மா, சாந்தோம்
மாணவர்களின் முன்னேற்றத்தில், தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு, முக்கிய பங்கு உண்டு. பெற்றோர், மாணவர்களின் ஆர்வம் பாராட்டுதலுக்குரியது. அவர்களுக்கு வழிகாட்டுவதில் காவல் துறையும் பெருமைப்படுகிறது. நிகழ்ச்சியில், பாடவாரியாக இன்னும் கூடுதல் நேரம் ஒதுக்கினால், சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
- பீர் முகமது, காவல் உதவி ஆணையர், திருவல்லிக்கேணி
முயற்சி இல்லையேல் வெற்றி இல்லை; முயற்சிதான் வெற்றியின் திறவுகோல். படிப்பில், தள்ளிப்போடும் பழக்கம் வேண்டாம். நாளை என்பது ஒருபோதும் இல்லை. ஒவ்வொரு நாளும் படிப்பது, ஒவ்வொரு வாரமும், திரும்ப படிப்பது ஆகிய பழக்கங்கள் வெற்றியை அளிக்கும்.
- சுப்பு ஸ்ருதி, கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவி
நான் வேளச்சேரியில் இருந்து, என் மகளை அழைத்துக் கொண்டு அதிகாலையிலேயே வந்தேன். இந்நிகழ்ச்சியை வெளியில் இருந்து தான் கேட்க முடிந்தது. மாணவர்கள் பயமின்றி, எவ்வாறு தேர்வெழுத வேண்டும் என்பதை விளக்கமாக கூறினர். என் மகளுக்கு இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை.
- வேணி, பெற்றோர்
என் போன்ற பெற்றோருக்கும், இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது. நானும், பல குறிப்புகளை எடுத்துள்ளேன். என் மகளின் படிப்பிற்கு உதவ நினைக்கிறேன்.
- ஷியாமளா, பெற்றோர்
