அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையங்களை தேர்வுசெய்ய பாரதியார் பல்கலை அறிவுறுத்தல்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையங்களை தேர்வுசெய்ய பாரதியார் பல்கலை அறிவுறுத்தல்
UPDATED : நவ 25, 2014 12:00 AM
ADDED : நவ 25, 2014 12:03 PM
கோவை: பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்வி பயில விரும்பும் மாணவர்கள், பல்கலை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையங்களை தேர்வுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்விக் கூடத்தில், 51 இளங்கலை படிப்புகள், 33 முதுகலை, 34 எம்.பி.ஏ., பாடப் பிரிவுகள், 38 முதுகலை டிப்ளமோ, 47 டிப்ளமோ, 16 சான்றிதழ் படிப்புகள் மற்றும் எம்.சி.ஏ., பி.எட்., படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2014-15ம் கல்வியாண்டு முதல் எம்.எட்., படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை தவிர, இந்தியா மற்றும் சர்வதேச அளவிலுள்ள 350 கல்வி மையங்களில், 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 97 அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையங்கள் உள்ளன.
மேலும், www.bu.ac.in என்ற பல்கலை இணையதளத்தில், அங்கீகரிக்கப்பட்ட கல்வி மைய எண், பெயர், முகவரி, தொலைபேசி எண், இணையதள முகவரி ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, இம்மாத இறுதிவரை நடப்பதால், அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையங்களில் சேர, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலை தொலைமுறை கல்விக்கூட அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் அல்லது பல்கலையிலுள்ள தொலைமுறை கல்விக் கூடத்தில் நேரடியாக சேர்க்கை புரியலாம்; இல்லையேல், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பல்கலை இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட படிப்பு மையங்களை மாணவர்கள் தேர்வுசெய்ய வேண்டும்" என்றார்.
அலைச்சல் இல்லை!
அடுத்த கல்வியாண்டு முதல், ஆன்லைன் மாணவர் சேர்க்கை நடத்த பல்கலை திட்டமிட்டுள்ளது. இதனால், வெகு தொலைவிலுள்ள மாணவர்களுக்கு அலைச்சல் மிச்சம். மேலும், சில மாணவர்கள் பல்கலையில்தான் நேரடியாக சேர்க்கை புரிய வேண்டும் என தவறாக கருதுவதால், படிப்பை தொடர முன்வருவதில்லை. அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலேயே சேர்க்கை புரியலாம் என்பதால் மாணவர்களின் கல்விக்கனவு நனவாகிறது.
