நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மொழித்திறனை வளர்க்க பல்வேறு போட்டிகள்
நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மொழித்திறனை வளர்க்க பல்வேறு போட்டிகள்
UPDATED : நவ 26, 2014 12:00 AM
ADDED : நவ 26, 2014 10:55 AM
புதுச்சேரி: நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மொழித்திறனை வளர்க்கும் வகையில், பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நாட்டு நலப்பணித்திட்ட இணைப்பு அலுவலர் குழந்தைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்களின் நல்லொழுக்கம், சேவை மனப்பான்மை, பொது அறிவு, விழிப்புணர்வு, திறன் மேம்பாடு ஆகியவற்றை வளர்ப்பதில் முன்னின்று பணியாற்றி வருகிறது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து மாணவ, மாணவியரின் மொழித் திறனை வளர்க்கும் வகையில் ஜனவரி மாதம் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இளைஞர் எதிர்காலமும், திறன்மேம்பாடும், அகத்தையும் புறத்தையும் துாய்மையாகப் பராமரித்தல், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்க்கும் முறைகள் ஆகிய பொருளில் பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய போட்டிகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புதுச்சேரியிலும், காரைக்காலிலும் நடத்தப்படும்.
ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் பள்ளி மூலமாக கல்வித்துறை 4வது தளத்திலுள்ள நாட்டு நலப்பணித்திட்ட அலுவலகத்தில் தங்கள் பெயரையும், பங்குபெற விரும்பும் போட்டி குறித்த விபரத்தையும் வரும் டிசம்பர் 26ம் தேதிக்குள் கடிதம் மூலமாக (தொடர்பு எண்ணுடன்) பதிவு செய்து கொள்ளவும். பதிவு செய்தவர்களுக்குப் போட்டி நடக்கும் இடம், நேரம் ஆகியவை ஜனவரி முதல் வாரத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
