வரலாற்று சின்னங்களை பராமரித்து, பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்: வரலாற்று ஆராய்ச்சியாளர்
வரலாற்று சின்னங்களை பராமரித்து, பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்: வரலாற்று ஆராய்ச்சியாளர்
UPDATED : நவ 27, 2014 12:00 AM
ADDED : நவ 27, 2014 11:10 AM
கோவை: கோயமுத்துார் வரலாற்றை அனைவரும் தெரிந்து கொண்டு, வரலாற்று சின்னங்களை பராமரித்து, பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என, வரலாற்று ஆராய்ச்சியாளர் சி.ஆர்.இளங்கோவன் வலியுறுத்தினார்.
கோவை மாநகராட்சி சார்பில், கோயமுத்துார் தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநகராட்சி பிரதான வளாகத்தில், கோவையிலுள்ள புராதான கட்டடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள், நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய கோவை குறித்த புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கண்காட்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன், துணை கமிஷனர் காந்திமதி, சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ராக் அமைப்பின் கவுரவ செயலாளர் ரவீந்திரன், வரலாற்று ஆராய்ச்சியாளர் சி.ஆர்.இளங்கோவன், ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அதையடுத்து, புராதான கட்டடங்களுக்கு, மாநகராட்சி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அழைத்து செல்லப்பட்டனர். பெரியகடை வீதியில், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி செயல்படும் கட்டடம், புனித மைக்கேல் தேவாலயம், மணிக்கூண்டு, ஒப்பணக்கார வீதியிலுள்ள பழமையான பள்ளிவாசல், ராஜவீதியில் துணி வணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்படும் முதல் கலெக்டர் அலுவலக கட்டடம், வெரைட்டிஹால் ரோட்டிலுள்ள டிலைட் தியேட்டர் ஆகிய இடங்களை மாணவர்கள் சுற்றிப்பார்த்தனர். ஒவ்வொரு இடத்திலும் கட்டடம் கட்டப்பட்ட ஆண்டு, அதன் வரலாற்று முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
வரலாற்று ஆராய்ச்சியாளர் சி.ஆர்.இளங்கோவன் பேசியதாவது: கோயமுத்துார், பேரூர் பகுதிக்குள் இருந்த சின்ன கிராமம். பல கட்ட படையெடுப்புகளுக்கு பிறகு, கிழக்கிந்திய கம்பெனி, கொங்கு மண்ணில் தலைதுாக்கியது. 1804, நவ., 24ல், கோயமுத்துாரை தலைநகராக கொண்டு, மாவட்டம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது, கோயமுத்துார் மாவட்டத்துக்கு 210 வயதாகிறது. கேரளாவில் இருக்கும் பாலக்காடு முதல், கர்நாடகாவில் இருக்கும் கொள்ளேகால் வரையிலும் கோயமுத்துாரின் பரப்பு பரந்து விரிந்திருந்தது.
மலை மாவட்டமாக நீலகிரி மாவட்டம், 1868ல் பிரிக்கப்பட்டது. இந்த நுாற்றாண்டின் துவக்கத்தில், பவானி, கோவை, தாராபுரம், ஈரோடு, கரூர், கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், பாலக்காடு, உடுமலைப்பேட்டை ஆகியவை, கோயமுத்துார் மாவட்டத்துக்கு உட்பட்ட தாலுகாக்களாக இருந்தன.
மொழிவாரி மாநிலங்கள் பிரித்தபோது, 1956ல் கொள்ளேகால் தாலுகா முழுவதும், கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டது. பாலக்காடு பகுதிகள் கேரளாவுக்கு வழங்கப்பட்டன. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது, கரூர் தாலுகா, திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இப்போது கரூர், தனி மாவட்டத்தின் தலைநகராகவுள்ளது. பிற்காலத்தில் பவானி, தாராபுரம், சத்தியமங்கலம் ஆகியவை, 1979ல் உருவான ஈரோடு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. கடைசியாக, 2009 பிப்ரவரியில், திருப்பூர், உடுமலை பகுதிகளை பிரித்து, திருப்பூரை தலைமையிடமாக கொண்ட மாவட்டம் உருவாக்கப்பட்டது.
இன்றைய கோயமுத்துார் மாவட்டத்தில், இரண்டு வருவாய் கோட்டங்கள், 10 தாலுகாக்கள், 33 உள்வட்டங்கள், 295 வருவாய் கிராமங்கள், ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், ஒரு மாவட்ட பஞ்சாயத்து, 12 ஊராட்சி ஒன்றியங்கள், 44 பேரூராட்சிகள், 227 கிராம ஊராட்சிகள் என பிரித்து நிர்வாகம் செய்யப்படுகிறது. அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் கோயமுத்துார் வரலாற்றை தெரிந்து கொண்டு, வரலாற்று சின்னங்களை பராமரித்து, பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, இளங்கோவன் பேசினார்.
