UPDATED : நவ 27, 2014 12:00 AM
ADDED : நவ 27, 2014 12:49 PM
ஆலந்துார்: ஆலந்துார் குழந்தைகள் மையத்தில் கழிப்பறை வசதிகள் இல்லாததால், தெருவை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர்.
ஆலந்துார் மண்டலம், 160வது வார்டு, முத்தம்ஜி தெருவில், 15 ஆண்டுக்கு மேலாக செயல்படும் ஒரு குழந்தைகள் மையம் உள்ளது. அங்கு, 30 குழந்தைகள் உள்ளனர். பழைய கட்டடத்தில் செயல்பட்ட நிலையில், 3.5 லட்சம் ரூபாய் செலவில், 2009ம் ஆண்டு புதிய குழந்தைகள் மைய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், கழிப்பறை வசதி இல்லாமல் கட்டப்பட்டு உள்ளது.
அதனால், தெருவில் திறந்தவெளி இடங்களை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய அவலநிலைக்கு, குழந்தைகள் தள்ளப்பட்டு உள்ளனர். வாகனங்கள் அதிகம் செல்லும் முத்தம்ஜி தெரு உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குழந்தைகள் மையத்தில் கழிப்பறை கட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
