மாதிரி கிளைடர் விமானம் இயக்குவது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி
மாதிரி கிளைடர் விமானம் இயக்குவது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி
UPDATED : நவ 29, 2014 12:00 AM
ADDED : நவ 29, 2014 01:34 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை மைதானத்தில், என்.சி.சி., மாணவர்களுக்கு, மாதிரி கிளைடர் விமானம் இயக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னை, கோயம்புத்துார், திருச்சி, சேலம் மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த என்.சி.சி., மாணவர்களுக்கு, புதுச்சேரி, லாஸ்பேட்டை என்.சி.சி., தலைமையகத்தில், கடந்த 26ம் தேதி முதல், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முகாமில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், டில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
பயிற்சி நிறைவு நாளான நேற்று, புதுச்சேரி விங் கமாண்டர் பர்குணன், ஏரோ மாடலிங் பயிற்சியாளர் சந்திரசேகரன் முன்னிலையில், ரிமோட் மூலம் கிளைடர் இயக்குவது தொடர்பான பயிற்சி லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானத்தில் நடந்தது. இதில் பல்வேறு யூனிட்டுகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் ரிமோட் மூலம், ரிமோட் கண்ட்ரோலர் க்ளைடர் மற்றும் ரிமோட் பவர் க்ளைடர் ஆகிய இரண்டு வகை க்ளைடர்களை வானில் பறக்கவிட்டு காண்பித்தனர். சிறிய ரகத்தினாலான க்ளைடர் விமானம், வானத்தில் வட்டமடித்தும், பல்டி அடித்தும் பறந்ததை, ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு ரசித்தனர்.
