கடின உழைப்பு, திட்டமிடல் இருந்தால் அதிக மதிப்பெண்: தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்
கடின உழைப்பு, திட்டமிடல் இருந்தால் அதிக மதிப்பெண்: தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்
UPDATED : நவ 30, 2014 12:00 AM
ADDED : நவ 30, 2014 11:08 AM
திருமங்கலம்: கடின உழைப்பு, திட்டமிடல் இருந்தால் அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதிக்கலாம், என திருமங்கலத்தில் நடந்த தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பேசினர்.
டி.வி.ஆர்., அகாடமி மற்றும் தினமலர் கல்விமலர் சார்பில் திருமங்கலம் வி.எஸ்.ஆர்., ராமதிலகம் கல்யாண மண்டபத்தில் நேற்று காலை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் பிளஸ் 2 மாணவர்களுக்கும் நடந்த நிகழ்வுகளில் ஆசிரியர்கள் பேசியதாவது...
பத்தாம் வகுப்பு
ஆதிஞானக்குமரன்(ஆங்கிலம்)சேதுபதி மேல் நிலைப் பள்ளி ஆசிரியர், மதுரை: திட்டமிட்டு படித்தால் ஆங்கிலம் தேர்வு எளிது. தினமும் பத்து புதிய ஆங்கில வார்த்தைகளை கற்றுக்கொள்ள வேண்டும். மனப்பாடப் பாடலை மீண்டும் மீண்டும் எழுதிப்பார்க்க வேண்டும்.
முதல் மூன்று பாடங்களை முழுமையாக படித்தால் ஒரு மார்க், 2 மார்க் மற்றும் 5 மார்க் பகுதி வினாக்களை எளிதில் எழுதலாம். ரூட்மேப் மற்றும் விளம்பர பகுதிகளை படித்தால் முழு மதிப்பெண் பெறலாம்.
தென்கரை முத்துப்பிள்ளை(கணிதம்) அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், வேடர்புளியங்குளம்: மொத்தம் 12 பாடங்கள். இவற்றில் 205 ஒரு மார்க் வினாக்கள் உள்ளன. தினமும் 10 வீதம் படித்து வந்தால் முதல் பகுதியில் முழு மதிப்பெண் பெறலாம். கணங்கள், அணிகள், முக்கோணவியல், நிகழ்தகவு, அளவியல் பகுதி வினாக்களில் எளிதாக முழு மதிப்பெண் பெறலாம். கிராப், படங்கள் வரைதல் உட்பட இப்பாடத்தில் தினமும் ஒரு மணிநேரம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பாலாஜி (அறிவியல்) தாசில்தார், சென்னை: மொத்தமுள்ள 17 பாடங்களில் மூன்றை முழுமையாக படித்தால் எளிதில் தேர்ச்சி பெறலாம். சென்டம் பெற வேண்டும் என்ற மாணவர்கள் புக்பேக் ஒரு மார்க் வினாக்கள், படங்கள், அட்டவணை, கணக்கீடு போன்றவற்றை படிப்பதுடன் புத்தகத்தின் உட்பகுதிகளை சேர்த்து படிக்க வேண்டும்.
பிளஸ் 2
ஜெயசந்திரன்(ஆங்கிலம்) ஏ.சி., மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், மதுரை: ஆங்கிலம் முதல் தாளில் இலக்கணப் பகுதியில் இருந்து 65 மதிப்பெண் கேட்கப்படும். இப்பகுதியில் மாணவர்கள் அதிகம் பயிற்சி எடுக்க வேண்டும். 11 முதல் 23 வினாக்கள் பகுதியில் இடியம்ஸ் பிரேஸ் வெர்ப் வினாக்களை தவிர பிற வினாக்களை தேர்வு செய்யலாம். மனப்பாட பாடல்களை அடிக்கடி எழுதிப் பார்க்க வேண்டும். தாள் 2ல் ஆங்கில திறமைக்கு மதிப்பெண் கிடைக்கும்.
பாலாஜி(கணிதம்) தாசில்தார், சென்னை: மொத்தம் பத்து பாடங்களில் 2, 3, 6, 9 பாடங்களில் 10 மதிப்பெண் வினாக்களும், 3, 9ம் பாடங்களில் 6 மதிப்பெண் வினாக்களும் படித்தாலே தேர்ச்சி பெறலாம். இதுவரை நடந்த பொது தேர்வுகளில் இடம் பெற்ற ஒரு மார்க் வினாக்களை படித்தாலே அனைத்து வினாக்களையும் எழுதலாம். புத்தக வினாக்கள் மற்றும் கம்புக் வினாக்களை ஆழமாக படித்தால் முழு மதிப்பெண் பெறலாம்.
காளிமுத்து (இயற்பியல்) பான்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர், திருநகர்: மொத்தம் 10 பாடங்களில் 9, 2, 1, 6, 8, 4 ஆகிய பாடங்களை நன்கு படித்தாலே 15 மூன்று மார்க் வினாக்கள் எழுதலாம். 2, 7, 1, 3, 5 ஆகிய பாடங்களை நன்கு படித்தால் 7 ஐந்து மதிப்பெண் வினாக்களை எழுதிவிடலாம். 1, 4, 6, 8 ஆகிய பாடங்களில் இருந்து பத்து மார்க் வினாக்கள் வரும். புக்பேக்கில் இருந்து 18 ஒரு மார்க் வினாக்கள் கேட்கப்படும். இப்படி படித்தால் 150க்கு 145 மதிப்பெண் வரை பெறலாம்.
குருவம்மாள் (வேதியியல்) பி.கே.என்., பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை, திருமங்கலம்: மொத்தமுள்ள 22 பாடங்களில் திடவேதியியல், வெப்ப இயக்க வேதியியல், வேதி சமநிலை, அணு அமைப்பு, ஈத்தர், நடைமுறை வேதியியல், உட்கரு, புறப்பரப்பு வேதியியல், அணைவு சேர்மங்கள், மின் வேதியியல் உட்பட 15 பாடங்களை தேர்வு செய்து படித்தாலே 140 மதிப்பெண் வரை பெறலாம். புக்பேக் ஒரு மார்க் வினாக்கள் முழுவதையும் தெளிவாக படிக்க வேண்டும். முந்தைய வினா வங்கியில் இடம் பெற்ற வினாக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
திருவள்ளுவர் கல்வி நிறுவனங்கள் மல்லப்புரம்: ஒவ்வொரு மாணவர்களிடமும் திறமைகள் உள்ளன. அவற்றை இதுபோன்ற நிகழ்ச்சிகளால் தான் வெளிக்கொண்டு வர முடியும். தன்னம்பிக்கை, முயற்சி, குறிக்கோள், பாசிட்டிவ் எண்ணங்களுடன் தேர்வை எதிர்கொண்டால் நிச்சயம் வெற்றி கிட்டும்.
- ஜஸ்டின் சகாயராஜ், எச்.ஆர்., ஆலோசகர்
மாணவர்களுக்கு வினா விடை கையேடுகள் வழங்கப்பட்டன.
