ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு கொட்டும் மழையிலும் குவிந்த மாணவர்கள்!
ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு கொட்டும் மழையிலும் குவிந்த மாணவர்கள்!
UPDATED : நவ 30, 2014 12:00 AM
ADDED : நவ 30, 2014 12:03 PM
சிதம்பரம்: சிதம்பரத்தில், தினமலர் மற்றும் கல்வி மலர் சார்பில் நடந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், கொட்டும் மழையிலும் மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தினமலர் நாளிதழ் மற்றும் கல்வி மலர் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜெயித்துக் காட்டுவோம் என்ற தன்னம்பிக்கையூட்டும் சிறப்பு நிகழ்ச்சி, சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
சிதம்பரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்த நிலையிலும் நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவ, மாணவிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காலை 7:00 மணி முதல் நிகழ்ச்சிக்கு குவியத் துவங்கினர்.
காலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடம் குறித்து தஞ்சை மாவட்டம், பெருமகளூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன், ஆங்கிலம் பாடம் குறித்து சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மாலதி, கணக்கு பாடம் குறித்து புதுச்சேரி சேலியமேடு வாணி தாசனார் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வீரப்பன், அறிவியல் பாடம் குறித்து புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் குலசேகரன், சமூக அறிவியல் பாடம் குறித்து புதுச்சேரி தமிழ்த் தென்றல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் டாக்டர் அமலோர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மதியம் 1மணிக்கு பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு நடந்த நிகழ்ச்சியில் இயற்பியல் பாடம் குறித்து புதுச்சேரி மாவட்ட பயிற்சி மைய விரிவுரையாளர் பூபதி, வேதியியல் பாடம் குறித்து கடலூர், மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாரி, கணக்கு பாடம் குறித்து புதுச்சேரி கல்வித்துறையைச் சேர்ந்த ஸ்ரீதரன், தியாகத்துருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் முத்துக்குமரன் தாவரவியல் பாடம் குறித்தும், ராமமூர்த்தி விலங்கியல் பாடம் குறித்தும் கருத்துரை வழங்கினர்.
கணினி அறிவியல் பாடம் குறித்து புதுச்சேரி ஜீவானந்தம் மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் சவுந்திரபாண்டியன், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடம் குறித்து புதுச்சேரி என்.கே.சி., பெண்கள் மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் சிவராமரெட்டி, பொருளியல் பாடம் குறித்து கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இலியாஸ் டேவிட், வரலாறு பாடம் குறித்து கடலூர், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தேவகுமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து சாதனை படைத்த சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கிருபா, சுபாஷினி, மற்றும் நித்தியாஸ்ரீ ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் உருவம் பொறித்த வெள்ளிப் பதக்கம் அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முதலில் வந்த நான்கு மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு குறிப்பெடுக்க இலவசமாக நோட்டுகள், பேனா, புளூபிரிண்ட், உடம்பும் மனசும் நல்லா இருக்கணும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. பஸ் நிலையத்தில் இருந்து, பள்ளி வளாகத்திற்கு மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டது.
ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி சாதிக்க உதவியது: மாவட்ட அளவிலான சாதனைக்கான டி.வி.ஆர்., வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவிகள் கூறுகையில், "கடந்த ஆண்டு இதே இடத்தில் நடந்த ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்றோம், இது எங்களுக்கு அதிக மதிப்பெண் பெற உதவியாக இருந்தது. இந்த மேடையில் மாநில அளவில் அதிகம் மதிப் பெற்ற மாணவி கவுரவிக்கப்பட்டார். அப்போது முதல் நானும் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற தூண்டுதலில் சாதிக்க முடிந்தது.
வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை அன்றே படித்து எழுதிப் பார்ப்பேன், அதில் ஏற்படும் தவறுகளை அறிந்து திருத்திக் கொள்வேன். பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை வகுப்பு ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். பாடங்களை திட்டமிட்டு படித்தால் அதிக மதிப்பெண் பெற முடியும். படிக்கும்போதும், தேர்வு எழுதும்போதும் எந்த பதட்டமும் இல்லாமல் சாதாரணமாக படித்தாலே அதிக மதிப்பெற முடியும். வகுப்பில் தீர்க்க முடியாத சந்தேகங்களையும், தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி தீர்த்தது, என்றனர்.
