UPDATED : டிச 03, 2014 12:00 AM
ADDED : டிச 03, 2014 10:40 AM
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதி மாணவிகளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதி மாணவிகளும், சில நபர்களின் தொல்லைகளால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 37 மாணவிகள் விடுதிகளும், இதே எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளும் உள்ளன. ஒவ்வொரு விடுதிக்கும் தனி வார்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு தங்கி மாணவிகள் பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு மேல் இந்த விடுதி உள்ள பகுதிகளில் மாணவிகளை கேலி செய்யும் கும்பல் நடமாட்டம் அதிகம் உள்ளது. இவர்களில் சிலர் ஞாயிற்றுக்கிழமைகளில் அண்ணன், உறவினர் எனக்கூறி விடுதிக்கு உள்ளேயே வந்து மாணவிகளுடன் பேச தொடங்கி விடுகின்றனர். இதனால் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. இது குறித்து விடுதி வார்டன்கள், அந்தந்த பகுதி போலீசிற்கு தகவல்கள் கொடுத்துள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: விடுதி மாணவிகளுக்கு தொல்லை தரும் வெளிநபர்களுக்கு சில மாணவிகளே உதவிகளை செய்து வருகின்றனர். இதனால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உருவாகி உள்ளது. மாணவிகளே, யார் மூலம் தொல்லை ஏற்படுகிறது என்பது குறித்து போலீசாருக்கு தபால் கார்டு மூலம் தகவல் அனுப்பினாலும் அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மாணவிகள் தபால் மூலம் போலீசில் புகார் செய்யும் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம், என்றனர்.
