பள்ளி நேரங்களில் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்
பள்ளி நேரங்களில் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்
UPDATED : டிச 07, 2014 12:00 AM
ADDED : டிச 07, 2014 11:44 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு ரதவீதி ஜங்ஷன் பகுதியிலிருந்து மாதாங்கோயில் தெரு பாலம் வழியாக, பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம், திருவண்ணாமலை, ஆராய்ச்சிப்பட்டி, ரைட்டன்பட்டி, குலாலர் தெரு உட்பட சுற்று பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் சைக்கிள், டூவீலர்களிலும் நடந்தும் மாதாங்கோயில் பாலம், மேற்கு ரதவீதி, தெற்கு ரதவீதி வழியாக செல்கின்றனர். இந்த பாதையில் செட்டியக்குடி தெரு பகுதி ரோடு மிக குறுகலாக உள்ளது.
ஒரே நேரத்தில் ஒரு ஆட்டோ, சைக்கிள் மட்டும்தான் செல்லும் படியாக உள்ளது. ராஜபாளையத்திலிருந்து வரும் கார், லாரிகள் தூரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் மேற்கு ரதவீதி, மாதாங்கோயில் பாலம், ஆத்துக்கடை தெரு வழியாக செல்கின்றன. காலை, மாலை நேரங்களில் லாரி, வேன்களை ரோட்டின் குறுக்கே நிறுத்தி கடுமையான போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர்.
பள்ளி மாணவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். போலீசார் தற்போது ஆத்துக்கடை தெரு ஜங்ஷன் பகுதியில் நின்று கொண்டு மாதாங்கோயில் பாலம் வழியாக கனரக வாகனங்களை செல்வதை தடுத்து வருகின்றனர்.
இதேபோல், மேல ரதவீதி ஜங்ஷன் பகுதியில் ஒரு போலீசாரை நியமித்து பள்ளி நேரங்களில் மட்டுமாவது, கனரக வாகனங்களை முழுமையாக நிறுத்தி மாணவர்கள் சிரமமின்றி பள்ளிகளுக்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
