தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அபரிமிதான ஆலோசனைகளை அள்ளித்தந்த திருப்பூர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!

அபரிமிதான ஆலோசனைகளை அள்ளித்தந்த திருப்பூர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!

அபரிமிதான ஆலோசனைகளை அள்ளித்தந்த திருப்பூர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!


UPDATED : டிச 08, 2014 12:00 AM

ADDED : டிச 08, 2014 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2014 12:00 AM ADDED : டிச 08, 2014 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அதன் விவரம்

உமாராணி (தமிழ்): படித்ததை எழுதிப்பார்த்து பயிற்சி செய்தால், பிழைகளை தவிர்க்கலாம். வினாவுக்கு ஏற்ற விடை எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் கிடைக்கும். கவிதை எழுதும் பகுதியில், சினிமா பாடலை எழுதுவது தவறு; கற்பனையில் கவிதை எழுத வேண்டும். இலக்கண பயிற்சி அவசியம். கடந்தாண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு, முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். விடையளிக்கும் பகுதிகளை மாற்றி மாற்றி எழுதி, விடைத்தாள் திருத்துபவரை குழப்பக்கூடாது. அடி பிறழாமல், மனப்பாட பகுதியை நன்கு படித்திருந்தால், முழு மதிப்பெண் பெறலாம்.

அகஸ்டின் ரவி ( ஆங்கிலம்): ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெற, அர்த்தம் தெரிந்து படிக்க வேண்டும். அதற்கு, டிக்ஸ்னரி தேவை. ஆங்கில வார்த்தை, வரிகளை எழுதிப்பார்த்து பயிற்சி செய்தால் மட்டுமே, பிழையின்றி வேகமாக எழுதலாம். திருத்தும் ஆசிரியரை கவரும் வகையில், விடைத்தாள் இருக்க வேண்டும். மாணவர் படித்திருக்கிறார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். படிக்கும்போது, கடினமான வார்த்தைகளை அடிக்கோடிட்டு, அதை திரும்ப திரும்ப எழுதிப் பார்த்தால், பிழையின்றி எழுதலாம். தொடர்ச்சியாக எழுதுவது கூடாது; பத்தி பத்தியாக பிரித்து எழுத வேண்டும். தேவையான இடத்தில் வாக்கியத்தை முடித்து, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ரவி (இயற்பியல்): பாடம் நடத்தும்போது, குறிப்பு எழுதி படிக்க வேண்டும். வழ வழ என பதில் எழுதுவதை தவிர்க்க வேண்டும். தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிடுவது முக்கியம். தமிழ் வழி மாணவர்கள், ஆங்கில வினாக்களை படித்து, நேரத்தை வீணடிக்கக்கூடாது. படித்த பாடங்களில் வினா வந்தால், விரைவாக, எளிதாக, பதில் எழுத முடியும். எல்லா பாடங்களையும் படித்துச் செல்லும் மாணவருக்கு, தேர்வு சுலபமாக இருக்கிறது. படிக்காத மாணவருக்கு, சுலபமான கேள்வியும் கஷ்டமாக தோன்றும். அவகாசம் இருப்பதால், இனி திட்டமிட்டு படித்தாலும் கூட, அதிக மதிப்பெண் பெறலாம். நம்பிக்கையோடு படித்தால், ஜெயிப்பது உறுதி.

சில்வெஸ்டர் சந்துரு (கணிதம்): கணிதம் பாடத்தில் பின்புறம் உள்ள 271 ஒரு மதிப்பெண் வினாக்கள்; பெற்றோர் ஆசிரியர் கழக புத்தகத்தில் உள்ள 481 ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தால், தேர்வில் 40 மதிப்பெண் பெற்று விடலாம். மொத்தம் 10 ஆறு மதிப்பெண் வினாக்களில், 1,2,3,5,9,10வது பாடங்களில் இருந்து, ஒன்பது கேள்விகள் கேட்கப்படும். எதிர்மறை, நேர்மறை விதிகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. ஒன்பது பாடங்களை முழுமையாக படித்தால், 10 மதிப்பெண் வினாக்களுக்கு சுலபமாக விடை அளிக்கலாம். 1, 2, 3, 4வது பாடங்களை முழுமையாக படித்துக்கொள்ளுங்கள்; 10 மதிப்பெண் வினாக்கள் ஏழு கேட்கப்படும். ஒன்பதாவது பாடத்தில் இருந்து, 6 மதிப்பெண்ணுக்கு, இரு வினாக்கள் கேட்கப்படும். இதன்படி படித்தாலே, சராசரி மாணவர்கள் கூட, கணித பாடத்தில் 65 சதவீத மதிப்பெண் சுலபமாக பெறலாம்.

மைண்ட் பிரஷ் உளவியல் நிறுவன தலைவர் கீர்த்தன்யா பேசியதாவது: சினிமாவும், நிஜ வாழ்க்கையும் வேறு வேறு என்பதில் தெளிவு வேண்டும்; நிஜமான குடும்ப வாழ்க்கையில் நிறைய சிக்கல் கள் இருக்கின்றன. கஷ்டங்கள் நிறைந்தது மனித வாழ்க்கை. ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும், வாழ்க்கையில் துன்பம் வரும்போது, எத்தனை பேர் உதவிக்கு வருவார்கள் என்பதை கூற முடியாது. மனஸ்தாபம் ஏற்படாத உறவு எதுவுமே இல்லை. ஒருவரை ஒருவர் அனுசரித்து நடப்பது, வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் சாத்தியமாக இருப்பதில்லை. கணவன், மனைவியாக 50, 60 ஆண்டுகள் ஒன்றாக வாழ்வதே இங்கு பெரும்போராட்டமாக உள்ளது.கருத்து வேற்றுமையால், மனதால் பிரிந்து வாழும் பெற்றோர், பிள்ளைகளுக்காக வீடுகளில் சேர்ந்து இருக்கின்றனர்; பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி, தங்களது சுக, துக்கங்களை மறந்தும், மறைத்தும் பல பெற்றோர் தங்களது வாழ்நாட்களை கடத்துகின்றனர். இது, பெரும்பாலும் பிள்ளைகளுக்கு புரிவதோ, தெரிவதோ இல்லை.

இளமையில் வறுமை என்பதை காட்டிலும், முதுமையில் வறுமை கொடுமையானது; உடல், மனதளவில் தளர்ந்து, முதுமையில் தினமும் உழைத்து சாப்பிடும் கஷ்டம், கொடுமையானது. பெற்றோரை அத்தகைய கஷ்டங்களில் இருந்து, பிள்ளைகள் மீட்க வேண்டும். அதற்கு சரியாக படித்து, தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும். பெற்றோரை, நிம்மதியாக வாழவைக்க, மாணவர்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும், என்றார்.அதன்பின், மாணவ, மாணவியருக்கு உளவியல் சார்ந்த பயிற்சிகளை அளித்தார்.

மாணவியருக்கு பதக்கம்: கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,186 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில், இரண்டாமிடம் பிடித்த மண்ணரை சசூரி வித்யாபவன் மாணவி நிவேதா, தாராபுரம் விவேகம் பள்ளி மாணவி மோனிகா மற்றும் முத்தூர் விவேகானந்தா பள்ளி மாணவி கிருத்திகா ஆகியோருக்கு, தினமலர் நாளிதழ் சார்பில், டி.வி.ஆர்., அகாடமி நினைவு பதக்கம் அறிவிக்கப்பட்டது. மாணவி நிவேதா, மற்ற இரண்டு மாணவியரின் பெற்றோர் பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

அருமையான நிகழ்ச்சி

ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி தொடர்பாக, மாணவ, மாணவியர் பெற்றோர் கூறியதாவது:

பாலசுப்ரமணியன், எம்.புதுப்பாளையம்: எளிதாக நூறு மதிப்பெண் பெறுவது எப்படி என்பதை ஆசிரியர்கள் தெளிவாக விளக்கினர். முயற்சியும், முறையான பயிற்சியும் இருந்தால், அது சாத்தியமே என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

முத்துலட்சுமி, காலேஜ் ரோடு ஹவுசிங் யூனிட்: மாணவர்களை தெளிவுபடுத்தும் அருமையான நிகழ்ச்சி இது. கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில், தேர்வை எப்படி எதிர்கொள்வது என அனுபவமிக்க ஆசிரியர்கள் அழகாக விளக்கினர். திட்டமிட்டு படிப்பது குறித்து ஆசிரியர்கள் தெளிவுபடுத்தியது அருமை.

தினமும் பயிற்சி செய்யுங்கள்

பரமேஸ்வரி (வேதியியல்): வேதியியல் பாடத்தில், தொடர்ந்து பயிற்சி செய்தால் பொதுத்தேர்வில் சுலபமாக, அதிக மதிப்பெண் பெற முடியும்; கஷ்டமாக இருக்கு என படிக்காமல் இருந்து விட்டால், அப்பகுதிகளில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு பதில் எழுத முடியாது. சமன்பாடுகளை, முக்கிய விதிகளை அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும்; பாடங்களை திட்டமிட்டு படிக்க வேண்டும். முதல் தொகுதியை முழுமையாக படித்திருந்தால், நிறைய வினாக்களுக்கு பதில் அளிக்கலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தொகுத்துள்ள வினா வங்கி புத்தகத்தை வாங்கி, மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பதில் அளிக்க, பாடப்புத்தகத்தை முழுமையாக படித்திருக்க வேண்டும்; பயிற்சி வினாக்களை தினமும் பயிற்சி செய்ய வேண்டும்.

நேர மேலாண்மை மிக மிக முக்கியம்

சித்ரா (கம்ப்யூட்டர் சயின்ஸ்): ஐந்து மதிப்பெண், இரண்டு மதிப்பெண், ஒரு மதிப்பெண் என வினாக்களை பிரித்து, அதற்கேற்ப திட்டமிட்டு படிக்க வேண்டும். மொத்தம் 24 வினாக்களை படித்திருந்தால், அதில் ஐந்து மதிப்பெண் பெறும் ஏழு கேள்விகளுக்கு, எளிதாக பதில் எழுதலாம். ஓ.எம்.ஆர்., தாளில் விடை எழுதும்போது, முழுமையாக வட்டமிட்டு காட்ட வேண்டும். அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது. இரண்டு மதிப்பெண் பதில்களில், தேவையான இடங்களில் உதாரணங்கள், ஐ கான், டயலாக் பாக்ஸ் குறிப்பிட வேண்டும். உட்தலைப்புடன், முக்கியமான இடங்களில், வார்த்தைகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும்.

இசைவாணி (விலங்கியல்): ஒரு வார்த்தை பதிலுக்கு, பாடப்புத்தகத்தை முழுமையாக வரி விடாமல், படித்திருக்க வேண்டும். பாடங்களில் உள்ள பயிற்சி வினாக்களில் இருந்து, அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன. பத்தி பத்தியாக பதில் எழுதாமல், பாயிண்டுகளாக எழுதினால், நேரம் மிச்சமாகும்; திருத்துவோருக்கும் எளிதாக இருக்கும். படங்களை, குறிப்பிட்ட அளவில் வரைந்தாலே போதும். பெரிய படங்களுக்கு, கூடுதல் மதிப்பெண் கிடைக்காது; நேரமும் வீணாகும். தேவையான இடங்களில் படம் இருக்க வேண்டும். 1, 5, 6வது பாடங்களில், 20 மதிப்பெண் கேள்விகள் நிச்சயம் வரும்.

நாகராஜ் (தாவரவியல்): இயற்பியல், வேதியியல், கணிதத்துக்கு தரும் முக்கியத்துவத்தில் 50 சதவீதம் தந்தாலே, தாவரவியல் பாடத்தில் கணிசமான மதிப்பெண் பெறலாம். தாவர செயலியல் முக்கியமான பாடம். அதிகமான வினாக்கள் அதில் கேட்கப்படுகின்றன. நேர மேலாண்மை மிக முக்கியம். தாவரவியல் பாடத்தை ஒன்றரை மணி நேரத்துக்குள் முடித்தால் மட்டுமே, விலங்கியல் தேர்வை முழுமையாக எழுத முடியும். படம் வரைந்தால், பாகங்களையும் குறிக்க வேண்டும். இல்லாவிட்டால், மதிப்பெண் குறையும். பாடப்புத்தகத்தில் உள்ள பதில்களையே எழுத வேண்டும்; வார்த்தைகளை மாற்றி, மாற்றி எழுதக்கூடாது.

சுவாரஸ்யமான பாடம் வரலாறு

வரலாறு (ஜெயலட்சுமி): மிகவும் சுவாரஸ்யமான பாடம், வரலாறு. எங்கே, ஏன், எப்படி, எதற்காக, யார், யாருக்கு இடையே போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்தால், விடை முழுமை அடைந்து விடும். எந்தெந்த நிகழ்வுகள் எந்த ஆண்டு நடந்தன என்பது, மனதில் பதிய செய்ய வேண்டும். தைரியம், தன்னம்பிக்கை, விடை அளிப்பதில் முழுமை. இம்மூன்றையும் கடைபிடித்தால், நிச்சயம் சென்டம் கிடைக்கும்.

ஜீவா செந்தில் (புவியியல்): நாட்டின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் வழித்தடங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். வரைபடத்தில் ரயில் வழித்தடத்தை குறிப்பிடும்போது, முக்கியமான சந்திப்புகளையும் குறிக்க வேண்டும். கடற்கரை சார்ந்த பகுதிகள், மாநிலங்களின் இருப்பிடம், தலைநகரங்கள், முக்கிய இடங்களை மனதில் நிறுத்தி, படிக்க வேண்டும். இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு, உதாரணங்களுடன் விடையளிக்க வேண்டும்.

லதா (அறிவியல் பகுதி-1): வேதியியல், இயற்பியல் பாடங்களை புரிந்து படிப்பது அவசியம். வேதியியலில் தனிம வரிசை அட்டவணை, இயற்பியலில் காந்த புலங்கள் முக்கியமானவை. மின்னூட்டம், காந்த புலங்கள் படம் வரையும்போது, அவை செல்லும் பாதையை அம்புக்குறியிட்டு காட்ட வேண்டும். சூத்திரங்களை, தனியாக கட்டத்துக்குள் எழுதுவது சிறப்பு. இதனால், பாடங்களை மாணவர் புரிந்து வைத்திருப்பதை, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் எளிதாக உணர முடியும்.

ஜெசி ஜேக்கப் (அறிவியல் பகுதி-2): தாவரவியல், விலங்கியல் பாடங்களில், வரைபடங்கள் முக்கியம். படங்கள் வரைவது பாகம் குறிப்பிடுவதற்கு தனித்தனி மதிப்பெண் வழங்கப்படும். பாகங்களை சரிவர குறிப்பிடாவிட்டால், மதிப்பெண் இழக்க நேரிடும். ஒரு மதிப்பெண் வினாக்களை, பாடப்புத்தகத்தில் உள்ளவற்றை படித்தாலே, விடை அளித்து விடலாம். விலங்கியல் பாடத்தில் 2, 3, 5, 7ம் பாடங்கள் முக்கியமானவை; இவற்றில், எல்லா கேள்விகளையும் படிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us