UPDATED : டிச 09, 2014 12:00 AM
ADDED : டிச 09, 2014 12:14 PM
சிவகங்கை: மானாமதுரை அருகே கல்குறிச்சியில் ஊருக்கு வெளியே பள்ளி புதிய கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
மானாமதுரை அருகே கல்குறிச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, கரிசல்குளம், கல்குறிச்சி, மேட்டான்காடு, ஆலங்குளம், தீத்தான்குளம், உடைகுளம், சிப்காட் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படிக்கின்றனர். நடுநிலைபள்ளி செயல்படும் பள்ளி கட்டட வளாகத்தில் இடமின்றி சமுதாயக்கூடத்தில் மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புதிய கட்டடம்: தற்போது அரசு உயர்நிலைப் பள்ளிக்கென ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட முடிவு செய்துள்ளனர். இப்புதிய கட்டடம் கல்குறிச்சியில் இருந்து 4 கி.மீ., தூரமுள்ள கங்கையம்மன் குடியிருப்பு பகுதியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். எனவே, பழைய பள்ளி கட்டடத்திற்கு அருகே அரசு புறம்போக்கு இடத்திலேயே புதிய வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும் எனக்கோரி, கிராம தலைவர் அழகர், ஊராட்சி துணை தலைவர் திலீப்குமார் தலைமையில் வந்த கிராமத்தினர், கலெக்டர் ராஜாராமனிடம் புகார் அளித்தனர்.
கல்குறிச்சி ஊராட்சி துணை தலைவர் சி.திலீப்குமார் கூறுகையில், "கிராமத்தில் இருந்து புதிதாக கட்ட உள்ள பள்ளிக்கு செல்ல 4 கி.மீ., நடக்க வேண்டும். கண்மாய், காட்டிற்குள் இருப்பதால் மாணவிகள் செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே கிராமத்திற்குள் உள்ள அரசு புறம்போக்கு இடத்திலேயே புதிய கட்டடத்தையும் கட்டக்கோரி, கலெக்டரிடம் புகார் செய்துள்ளோம். அவர், "மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கட்டடம் கட்டித்தரப்படும்", என கூறியதாக தெரிவித்தார்.
