மதுரை காமராஜ் பல்கலையில் பெண்கள் விடுதி திறப்பு விழா
மதுரை காமராஜ் பல்கலையில் பெண்கள் விடுதி திறப்பு விழா
UPDATED : டிச 14, 2014 12:00 AM
ADDED : டிச 14, 2014 11:05 AM
நாகமலை புதுக்கோட்டை: மதுரை காமராஜ் பல்கலையில் பெண்கள் விடுதி திறப்பு விழா துணைவேந்தர் கல்யாணி தலைமையில் நடந்தது.
சிண்டிகேட் உறுப்பினர் பெரியகருப்பன் வரவேற்றார். யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜ் திறந்து வைத்து பேசியதாவது: இப்பல்கலையின் தமிழ், மானுடவியல், சமூக அறிவியல் துறைகளில் இருந்து போதியளவில் திட்ட அறிக்கைகள் யு.ஜி.சி.,க்கு வரவில்லை. இவை மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். பல்கலை தரத்தை மேலும் உயர்த்தி ஆற்றல்சால் அந்தஸ்த்தை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். ஆற்றல்சால் அந்தஸ்த்திற்கு வழங்கப்படும் தொகை ரூ.75 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் சிறந்த 3 பல்கலைகள் தேர்வு செய்யப்பட்டு தரத்தை மேலும் உயர்த்த தலா ரூ.150 கோடி நிதி வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார். பின் அவர் கூறுகையில், "50 மற்றும் 25 ஆண்டுகளை கடந்த பல்கலை, கல்லூரிகளுக்கு நிதியுதவி அளிக்க மானியக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும்" என்றார்.
