திறன்சார்ந்த படிப்புகளை துவங்க கல்லூரிகள் முன்வர வேண்டும்: யு.ஜி.சி. துணைத் தலைவர்
திறன்சார்ந்த படிப்புகளை துவங்க கல்லூரிகள் முன்வர வேண்டும்: யு.ஜி.சி. துணைத் தலைவர்
UPDATED : டிச 14, 2014 12:00 AM
ADDED : டிச 14, 2014 12:15 PM
மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி மற்றும் ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸின் 18 வது பட்டமளிப்பு விழா நடந்தது. சுப்பலட்சுமி லட்சுமிபதி அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்தார்.
யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜ் பேசியதாவது: பட்டம் பெற்ற மாணவர்கள் அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதன்மூலம், நாட்டின் வளர்ச்சியிலும் உங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சியில் தரமான உயர்கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.
பள்ளிக் கல்வி முடித்த 85 சதவீதம் மாணவர்களில், 20 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்விக்கு செல்கின்றனர். அதில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். உயர்கல்விக்கான சேர்க்கை விகிதம் 25 சதவீதமாகவும், ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் 5 சதவீதமாகவும் இருக்க வேண்டும்.
இதற்கு திறமையான மாணவர்களை உருவாக்கும் வகையில் தரமான படிப்புகளை கல்லூரிகள் துவங்க வேண்டும். தரமான கல்லூரிகளை உருவாக்கும் வகையில் யு.ஜி.சி., சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தனியார் கல்லூரிகளுக்கும் யு.ஜி.சி., மானியம் வழங்குகிறது. இதன்மூலம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு திறன்சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
நாட்டின் 4.2 சதவீத மொத்த நிகர வருவாயில் 1.2 சதவீதம் நிதி, உயர் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது வளர்ந்த நாடான அமெரிக்காவை ஒப்பிடும்போது அதிகம். இதனால்தான் 1950ல் இரண்டு சதவீதமாக இருந்த உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை, ஒன்பது மற்றும் பத்தாவது ஐந்தாண்டு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் இதன் வளர்ச்சி 48 சதவீதம் உயர்ந்து, நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட மாணவர்களின் சேர்க்கை 30 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. இதற்கு காரணம் தன்னாட்சி கல்லூரிகளின் வளர்ச்சிதான், என்றார்.
டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது: பட்டப் படிப்பு என்பது வேலைவாய்ப்பிற்கான உத்தரவாதம் அல்ல. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தேவையான அனைத்துத் திறன்களையும் நீங்களே வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலையில்லாதவர்கள் சமுதாயத்தின் சுமை. அவர்களின் எண்ணங்கள் தேவையில்லாத செயல்பாடுகளில் ஈடுபடும். எனவே உயர்கல்வி என்பது வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதாக அமைய வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கான பங்களிப்பை அளிப்பதுடன், படித்த கல்வி மையங்களின் வளர்ச்சிக்கும் உதவிட வேண்டும் என்றார். கல்லூரிச் செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு, நிர்வாக மேலாண்மையர் ராம்குமார், முதல்வர் பத்மநாபன், ஆலோசகர் பாலகிருஷ்ணன், துணை முதல்வர் வெற்றிவேல், ஆர்.எல்.ஐ.என்.எஸ்., முதல்வர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
