விழுப்புரம் அண்ணா பொறியியல் கல்லுாரியில் உலக அளவிலான கருத்தரங்கம்
விழுப்புரம் அண்ணா பொறியியல் கல்லுாரியில் உலக அளவிலான கருத்தரங்கம்
UPDATED : டிச 16, 2014 12:00 AM
ADDED : டிச 16, 2014 11:54 AM
விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா பொறியியல் கல்லுாரியில் உலக அளவிலான கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை, பல்கலைக்கழக மான்யக்குழு, அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம் வழிகாட்டுதலோடு கணிதப் பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கம் நடக்கிறது. இதன் துவக்க விழா கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
சென்னை அண்ணா பல்கலை கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் வெங்கடேசன், அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜியா பல்கலைக் கழக பேராசிரியர் கண்ணன் பேசினர்.
கல்லுாரி முதல்வர் டாக்டர் செந்தில் வரவேற்றார். கருத்தரங்கு ஆய்வு கட்டுரை முதல் பிரதியை ஜப்பான் பேராசிரியர் ஒப்பாட்டா வெளியிட, கொரியா பேராசிரியர் சோய் பெற்றுக் கொண்டார். பேராசிரியர்கள் ராமச்சந்திரன், சுதேஷ் நன்றி கூறினர்.
கருத்தரங்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. அமெரிக்கா, கொரியா, ஜப்பான், இத்தாலி, நெதர்லாந்து, மலேசியா, ரோமானியா மற்றும் இந்தியாவை சேர்ந்த கணித விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
கருத்தரங்கையொட்டி உலக அளவில் பல்வேறு கணித ஆராய்ச்சியாளர்களின் 305 கட்டுரைகள் பெறப்பட்டன. இதில் 184 கட்டுரைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கணித ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொண்டு, பயிற்சி பெற உள்ளனர்.
