டேபிள் டென்னிஸ் போட்டிகளில் கலக்கும் மாணவி நவீனபிரியா
டேபிள் டென்னிஸ் போட்டிகளில் கலக்கும் மாணவி நவீனபிரியா
UPDATED : டிச 17, 2014 12:00 AM
ADDED : டிச 17, 2014 11:57 AM
திருப்பூர்: தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று, மாணவி நவீனபிரியா, மாவட்டத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
அவிநாசி ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார், மாணவி நவீனபிரியா, 15. டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆர்வம் கொண்டுள்ள இவர், தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, தங்கம் வென்றுள்ளார். கடந்த 2013ல், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் நடந்த தேசிய போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்று, முதலிடம் பிடித்தார்.
அதே ஆண்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய பைக்கா விளை யாட்டில், முதலிடம் பெற்றார். திருப்பூர் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான போட்டியிலும், இவருக்கு முதலிடம் கிடைத்தது.
கடந்த 2012ல், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் நடத்திய போட்டியில், மாநில அளவில் முதலிடம் பெற்ற இவர், அதே ஆண்டு கோவையில் நடந்த போட்டியில், மண்டல அளவில் முதலிடம் பிடித்தார். திருப்பூர் மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டியிலும் முதலிடம் கிடைத்தது.
நடப்பாண்டில், சி.பி. எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையோன மண்டல அளவிலான போட்டியில் முதலிடமும், மாநில போட்டியில் மூன்றாமிடமும், கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, "தேசிய அளவிலான போட்டி, சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது எனது லட்சியம்" என்றார்.
