பயன்பாட்டிற்கு வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடம்
பயன்பாட்டிற்கு வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடம்
UPDATED : டிச 25, 2014 12:00 AM
ADDED : டிச 25, 2014 04:06 AM
வெள்ளவேடு: ’தினமலர்’ நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடம் பயன்பாட்டிற்கு வந்தது.
வெள்ளவேடு அடுத்துள்ள வயலாநல்லூரி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 75 மாணவ, மாணவியரும், ஐந்து ஆசிரியர்களும், ஒரு தலைமையாசிரியரும் உள்ளனர்.
இந்த பள்ளி கட்டடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் மாணவ, மாணவியர் ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கடந்த 2013-14ம் ஆண்டு 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராததால், பகுதிவாசிகள் புதிய பள்ளிக் கட்டடத்தை ஆட்டுக் கொட்டகையாக மாற்றினர்; இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து, கடந்த அக்டோபர் மாதம் ’தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பால்வள துறை அமைச்சர் ரமணா தலைமையில் பள்ளிக் கட்டடம் பயன்பாட்டிற்கு வந்தது.
