விளையாட்டு வீரர்களை சரியான முறையில் ஊக்கப்படுத்த அரசுக்கு கோரிக்கை
விளையாட்டு வீரர்களை சரியான முறையில் ஊக்கப்படுத்த அரசுக்கு கோரிக்கை
UPDATED : டிச 29, 2014 12:00 AM
ADDED : டிச 29, 2014 11:32 AM
புதுச்சேரி: ஆசிய அளவிலும், இந்திய அளவிலும் சாதனை படைக்கும் புதுச்சேரி விளையாட்டு வீரர்களுக்கு, ரொக்கப்பரிசு வழங்கி ஊக்கப்படுத்த, அரசு முன்வர வேண்டும்.
உலக அளவில் ஒவ்வொரு நாடும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், சாதனை விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் வகையிலும், ஊக்கப்படுத்தவும், ரொக்கப்பரிசுகள் வழங்கி வருகிறது. சாதனை படைக்கும் விளையாட்டு வீரர்கள் சார்ந்த மாநிலம் சார்பிலும், அவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.
சமீபத்தில் நடந்த காமன் வெல்த் விளையாட்டு போட்டி களில், பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு, அம்மாநில முதல்வரால் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. தங்கம் வென்றவர்களுக்கு ரூ.50 லட்சம், வெள்ளிப் பதக்கத்திற்கு ரூ.30 லட்சம், வெண்கலத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.
ரொக்கப்பரிசு வழங்கி வீரர்களை கவுரவிப்பதன் மூலம், மற்ற விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை பெறுவதற்கு வழிவகுக்கும். ஆனால் புதுச்சேரியில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. வாழ்த்து மட்டுமே கிடைக்கிறது. நிதி நெருக்கடி காரணத்தால், வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
உதாரணமாக, ஆசிய பீச் விளையாட்டு போட்டி, கடந்த நவ.,19ம் தேதியிலிருந்து 22ம் தேதி வரை தாய்லாந்தில் நடந்தது. இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய கபடி அணி, வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றது. இப்போட்டியில் இந்திய அணியில் விளையாடி, புதுச்சேரி நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் பரமேஸ்வரி, புதுச்சேரிக்கு பெருமை சேர்த்தார்.
பெரிய மாநிலங்களுக்கு கூட கிடைக்காத பெருமையை, புதுச்சேரி மாநிலத்திற்கு பரமேஸ்வரி பெற்றுத் தந்தார். பதக்கத்துடன் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, ஆசியும் பெற்றார். ஆனால், அவருக்கு அரசு சார்பில் வாழ்த்து மட்டுமே கிடைத்தது.
பிற மாநிலங்களில் வழங்கப்படுவதுபோல் ரொக்கப்பரிசு எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இவரை போன்று, சாதனை விளையாட்டு வீரர்கள் பலருக்கும் வாழ்த்து மட்டுமே இங்கு கிடைத்துள்ளதாக மூத்த விளையாட்டு வீரர்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து புதுச்சேரி விளையாட்டுத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, பிற மாநிலங்களில் அகில இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்களுக்கு, ரொக்கப்பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றன.
ஆனால், புதுச்சேரியில் பதக்கம் பெறும் வீரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படவில்லை. அரசின் நிதி நெருக்கடி காரணமாக, ரொக்கப்பரிசு கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே, புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பதக்கம் பெரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையிலும், மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சாதனை விளையாட்டு வீரர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
