விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் தேவையான அனைத்தையும் அரசு அளிக்கும்: பிரதமர்
விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் தேவையான அனைத்தையும் அரசு அளிக்கும்: பிரதமர்
UPDATED : ஜன 04, 2015 12:00 AM
ADDED : ஜன 04, 2015 02:27 PM
புதுடில்லி: அறிவியல் விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும். ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சிவப்பு நாடா முறை ஒழிக்கப்படும். நாட்டின் வறுமையை ஒழித்து மாற்றத்தை ஏற்படுத்த விஞ்ஞானிகள் உதவ வேண்டும், என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
நிபுணர்கள்
மும்பையில், 102வது இந்திய அறிவியல் மாநாடு நேற்று துவங்கியது. ஐந்து நாள் நடக்கும் இந்த மாநாட்டில், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வித்துறை நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வர்த்தக துறைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேசுகிறேனோ அதே அளவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கும், ஆராய்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நம் நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான விஞ்ஞானிகள், தங்களின் ஆராய்ச்சிகளுக்கு, அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது சவாலான காரியமாக உள்ளதாகவும், நிதிப் பிரச்னை பெரும் தடையாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இணைய பயன்பாடு
இனி, இதுபோன்ற பிரச்னை எதுவும் ஏற்படாது. அறிவியல் ஆராய்ச்சிக்கு தடையாக உள்ள சிவப்பு நாடா முறை ஒழிக்கப்படும். ஆராய்ச்சியாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு அளிக்கும். அறிவியல், ஆராய்ச்சியில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதையும் அரசு உணர்ந்துள்ளது.
நம் நாட்டில், கல்வியை அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்றியுள்ளோம். அதேபோல் இணைய பயன்பாட்டையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும். நம் நாட்டில் உள்ள இளைஞர்களும், குழந்தைகளும், விஞ்ஞானிகளுடன் நேரடியாக தொடர்புகொள்ள, இணைய பயன்பாடு அவசியம். இந்த இணைய பயன்பாட்டை எதிர்கால தலைமுறையினருக்கு அளிக்க வேண்டியது, நம் சமூக கடமை.
நம் பல்கலைக்கழகங்கள், அதிகப்படியான ஒழுங்கு கட்டுப்பாட்டாலும், நடைமுறைகளாலும் சிக்கித் தவிக்கின்றன. அவை, சுதந்திரமாகச் செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நம் விஞ்ஞானிகள், வியத்தகு சாதனைகளை அரங்கேற்றியுள்ளனர். அவர்களை நினைக்கும்போதே பெருமையாக உள்ளது. நாட்டில் உள்ள வறுமையை ஒழிக்கவும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் விஞ்ஞானிகள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
