தேங்கிய குப்பையில் துர்நாற்றம் - மாணவர்கள் பாதிப்பு
தேங்கிய குப்பையில் துர்நாற்றம் - மாணவர்கள் பாதிப்பு
UPDATED : ஜன 09, 2015 12:00 AM
ADDED : ஜன 09, 2015 12:32 PM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் தேங்கி கிடக்கும் குப்பையில் இருந்து, துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தங்கச்சிமடம் ஊராட்சி விக்டோரியா நகரில், ஆயிரத்துக்கு மேலான மீனவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள தனியார் பள்ளியில் 200க்கு அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். விக்டோரியா நகருக்கு செல்லும் சாலை ஓரத்தில், குப்பை தொட்டி இல்லாததால், தினமும் மக்கள் கொட்டும் குப்பைகள், மலை போல் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. அந்த குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியை ஸ்டெல்லா கூறியதாவது: மக்களிடம், சாலை ஓரத்தில் குப்பை கொட்டாதீர்கள் என பல தடவை எடுத்துக்கூறியும் பயனில்லை. பள்ளி அருகில்தான் குப்பைகளை கொட்டுகின்றனர். இங்கு சிறுவர்கள் மலம் கழிப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. மாணவர்களை தொற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இங்கு குப்பை தொட்டி வைக்கவும், தேங்கிய குப்பைகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறோம், என்றார்.
