தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை அரசின் இலவசப் பொருட்கள்!

மாணவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை அரசின் இலவசப் பொருட்கள்!

மாணவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை அரசின் இலவசப் பொருட்கள்!


UPDATED : ஜன 13, 2015 12:00 AM

ADDED : ஜன 13, 2015 12:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2015 12:00 AM ADDED : ஜன 13, 2015 12:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: இன்னும் மூன்று மாதங்களில், கல்வி ஆண்டு முடிய உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, கணித உபகரணம், காலணி, புத்தகப் பை, பென்சில் ஆகிய இலவச பொருட்கள் வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு மட்டும் முழுமையாக செயல்படுத்தப்பட்ட இலவச திட்டங்கள், இரண்டாவது ஆண்டிலேயே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச பாடநூல், சத்துணவு, காலணி, சீருடை, பேருந்து இலவச பயண அட்டை, மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகப் பை, கணித உபகரணம், வண்ண பென்சில், கம்பளி சட்டை, புவியியல் வரைபடம் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால், நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையால், கல்வியாண்டு முடிய இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் கூட, பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச பொருட்கள் கிடைக்கவில்லை.

தரக்கட்டுபாடு சிக்கல்: தமிழகத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட அன்றே, இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனால், மற்ற இலவச பொருட்கள் வழங்க, தரக்கட்டுப்பாடு பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை கொள்முதல் செய்வது, அதன் தரத்தை பரிசோதிப்பது, பள்ளி வாரியாக வினியோகம் செய்வது உள்ளிட்ட பணிகளை, பள்ளிக் கல்வித் துறை முறையாக செய்யாததால், தரமற்ற இலவச பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

அதற்காக, கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழ்நாடு பாடநூல் கழகம் என்ற பெயரை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கழகம் என மாற்றம் செய்து, சீருடை தவிர மற்ற இலவச பொருட்கள் கொள்முதல் செய்து, பள்ளி மாணவருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த புதிய நடைமுறை, நடப்பு கல்வியாண்டில்தான் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம், பொருட்கள் தரக்கட்டுப்பாடு சோதனை முடிவதற்கு, காலதாமதம் ஆவதாக கூறப்படுகிறது.

இதனால், இன்று வரை, பள்ளி மாணவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில், புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும், காலணி மற்றும் புத்தகப் பை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பழைய மாணவர்களுக்கு, முக்கிய பொருட்களான, புத்தகப் பை, காலணி, கணித உபகரணம், வண்ண பென்சில் ஆகிய நான்கு பொருட்கள் இன்று வரை வழங்கப்படவில்லை.

தாமதம் ஏன்?

இதுகுறித்து, கல்வி அதிகாரிகளிடமும், ஆசிரியர்களிடமும் கேட்டால், தரக்கட்டுப்பாடு முடிந்து, ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என்ற பதிலே கிடைக்கிறது என, பெற்றோர் கூறுகின்றனர்.

இதுகுறித்து, தொடக்கக் கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இலவச பொருட்கள் வழங்குவதில், தரக்கட்டுப்பாடு அறிக்கை கிடைக்கவில்லை என்பதாலேயே காலதாமதம் ஏற்படுகிறது. இலவச பொருட்களின் தரக்கட்டுப்பாடு அறிக்கை கிடைத்தவுடன், பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த மாதமே, அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு விடும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us