போதிய விழிப்புணர்வின்மையால் செயலிழந்த அண்ணா மறுமலர்ச்சி நூலக திட்டம்
போதிய விழிப்புணர்வின்மையால் செயலிழந்த அண்ணா மறுமலர்ச்சி நூலக திட்டம்
UPDATED : ஜன 17, 2015 12:00 AM
ADDED : ஜன 17, 2015 02:53 PM
உடுமலை: கிராமப்புற மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி நூலக திட்டம், போதிய விழிப்புணர்வின்றி, செயலிழந்துள்ளதாக, கல்வி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், அண்ணா மறுமலர்ச்சி நூலக திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒன்றிய நிர்வாகத்தினர் தலைமையில், ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில், பகுதி நேர நூலகம் இல்லாத கிராமங்களில், இந்நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியர் ஒருவர், கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு, மாதம் 750 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இத்திட்டம் நடைமுறையில் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளில், 20 சதவீதத்துக்கும் குறைவான ஊராட்சிகளில் மட்டுமே, இந்நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. இத்திட்டத்துக்கு, ஊராட்சி நிர்வாகங்கள் முக்கியத்துவம் அளிக்காததே, இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
செயல்படக்கூடிய சில அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களிலும், 5 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட புத்தகங்களே உள்ளன. நாளிதழ்கள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் உள்ளது. நூலக செயல்பாட்டில் பல குளறுபடிகள் இருப்பதாகவும், பல இடங்களில் பெயரளவில் நூலகம் செயல்படுவதாகவும், கல்வி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நூலகர் ஒருவரிடம் கேட்டபோது, "அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள், கிராம மக்களுக்கு பயனளிப்பவை. நூலகங்களுக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நூலகங்களை, நூலகத்துறையின் கீழ் இணைக்க பரிந்துரைக்கப்பட்டது. இதுவரை, அரசிடம் இருந்து பதில் இல்லை. நூலகத்துறையுடன் இத்திட்டத்தை இணைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
