தமிழக, புதுச்சேரி பல்கலைகளுக்கு ஆய்வுகளை மேம்படுத்த ரூ.17 கோடி ஒதுக்கிய யு.ஜி.சி.
தமிழக, புதுச்சேரி பல்கலைகளுக்கு ஆய்வுகளை மேம்படுத்த ரூ.17 கோடி ஒதுக்கிய யு.ஜி.சி.
UPDATED : ஜன 17, 2015 12:00 AM
ADDED : ஜன 18, 2015 11:00 AM
அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், ஆய்வுகள் மேற்கொள்ளவும், துறைகளின் வளர்ச்சிக்காகவும், யு.ஜி.சி., சிறப்பு நிதி வழங்குகிறது. ஐந்து ஆண்டுகளுக்கான, சிறப்பு உதவி திட்டம் - எஸ்.ஏ.பி., கீழ், இந்த நிதி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில், நாடு முழுவதும் உள்ள பல்கலைகள், நிகர்நிலை பல்கலைகள், இந்த நிதியை பெற விண்ணப்பித்தன.
சில பல்கலைகள், ஏற்கனவே உள்ள திட்டத்தின் அடுத்த கட்ட பணிகளுக்காக நிதி கேட்டு விண்ணப்பித்திருந்தன. இவற்றை, சமீபத்தில் கூடிய, யு.ஜி.சி.,யின் வல்லுனர் குழு ஆய்வுசெய்து, நிதியை வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது. அறிவியல் மற்றும் கலைத்துறை என, பிரித்து இந்த நிதி வழங்கப்படுகிறது. இதில், தமிழக பல்கலைகள் மற்றும் புதுச்சேரி பல்கலையும் நிதியை பெறுகிறது.
புதுச்சேரி பல்கலையில், வணிகவியல், பிரஞ்சு, வரலாறு, தமிழ், இயற்பியல், கணிதம், நில அமைப்பியல் துறைகளில் ஆய்வுக்காக, 8 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில், அண்ணாமலை, மதுரை காமராஜர், அழகப்பா, பாரதிதாசன், சென்னை பல்கலைகள், 9 கோடி ரூபாயை பெறுகின்றன. இதில், சென்னை பல்கலையின் கணித துறைக்கு, 1.38 கோடி; பாரதிதாசன் பல்கலையின் புவியியல் துறைக்கு, 1.28 கோடி; காந்தி கிராமம் ஊரக நிறுவனத்தின், வேதியியல், கணித துறைகளுக்கு, 2.42 கோடி ரூபாய்; மதுரை காமராஜர் பல்கலையின், மதம், தத்துவம் மற்றும் மானுடவியல் துறைக்கு, 78.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. அண்ணாமலை பல்கலை, கல்வியியல், சமூகவியல் துறைகளுக்கு, 1.86 கோடி ரூபாய் நிதியும் கிடைத்துள்ளது.
நிதி எப்படி?
பல்கலை துறைகளின் வளர்ச்சிக்காக, இந்த ஆண்டு ஏப்ரல் முதல், 2020 மார்ச் வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. நிதியை பெறும் பல்கலை துறைகள், குறைந்தபட்சம், ஒரு பேராசிரியர் உட்பட, ஆறு ஆசிரியர்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறது விதி.
விலகல்
இந்த நிதித் திட்டத்தில் இணைந்த சில பல்கலைகள் பாதியில் விலகியும் உள்ளன. இந்த வகையில், அண்ணாமலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலையின் கணிதத்துறை விலகி உள்ளது.
