"சின்னஞ்சிறு நகரில், ஒரே நாளில் 6 புத்தகங்களை வெளியிடுவது போற்றத்தக்க இலக்கிய செயல்பாடு"
"சின்னஞ்சிறு நகரில், ஒரே நாளில் 6 புத்தகங்களை வெளியிடுவது போற்றத்தக்க இலக்கிய செயல்பாடு"
UPDATED : ஜன 19, 2015 12:00 AM
ADDED : ஜன 19, 2015 12:52 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி போன்ற சின்னஞ்சிறு நகரில் இருந்து, ஒரே நாளில் ஆறு புத்தகங்களை வெளியிடுவது போற்றத்தக்க பெரும் இலக்கிய செயல்பாடு என பொள்ளாச்சியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றவர்கள் பாராட்டினர்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில், நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. பாலக்காடு ரோடு என்.ஜி.எம்., கல்லூரி வளாகத்தில் நடந்த இவ்விழாவில், நான்கு கவிதை தொகுப்புகள், ஒரு நாவல் மற்றும் ஒரு சிறுகதை தொகுப்பு என ஆறு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. கவிதை தொகுப்புகளில், கலாப்பிரியா எழுதிய என் இரவு ஒரு தேநீர் கோப்பையாகிறது, பூபாலனின் பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு, வைகறையின் ஜன்னல் திறந்தவன் எட்டி பார்க்கப்படுகிறான், சோலை மாயவனின் வனத்தில் மிதக்கும் இசை, ஆகிவை இடம் பெற்றன. மேலும், இளஞ்சேரல் எழுதிய கருட கம்பம் நாவல் மற்றும் நிலா ரசிகன் எழுதிய ஜூலி யட்சி, சிறுகதை தொகுப்பும் இதில் இருந்தன.
இவ்விழாவில் கவிஞர் கவிதாசன் பேசியதாவது: இங்கிருக்கும் இளைஞர்களை கவிஞர்களாக உருவாக்கியது அவர்களின் தேடல் தான். என் கல்லூரி காலத்தில் நான் படித்த ஒற்றை கவிதைதான் என் தூக்கத்தை கெடுத்து, தேடலை கொடுத்தது. அதில்தான், நான் கவிஞனாக உருவானேன். இத்தேடல் தான் கவிஞர்களை முரண்பாடுகள் உள்ளவர்களாக மாற்றுகிறது.
அது முரண்பாடல்ல; பரிணாம வளர்ச்சி. இந்த இளம் படைப்பாளிகளுக்கு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின், முயற்சி என்பது விதைகளை போல. அதை ஓயாமல் விதைத்துக்கொண்டே இருங்கள். அவை விளைந்தால் மரம். இல்லையென்றால் உரம், என்ற வார்த்தைகளையே கூற விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
கவிஞர் எட்வின் பேசுகையில், "இன்றைய இளம் கவிஞர்களின் ஒற்றுமை எங்கள் காலத்தில் இல்லை. அவர்களின் படைப்பு ஆளுமையை பார்க்கும்போது, எங்களை வென்று விட்டதாக தோன்றுகிறது" என்றார்.
ஓசை சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்த காளிதாஸ் பேசுகையில், "இன்றைய இலக்கிய உலகிற்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது, யாரோ சிலர், யாருக்காகவோ நடத்தும் பொழுதுபோக்கான செயல் அல்ல என்பதை நீங்கள் உங்கள் படைப்பின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட பழந்தமிழ் இலக்கியத்தில், மாட்டு வண்டியில் சென்ற ஒருவர், பறவைகளை தொந்தரவு செய்யக்கூடாது எனும் நோக்கில், மாட்டின் கழுத்தில் உள்ள மணிகளின் நாவுகளை ஓசை எழுப்பா வண்ணம் கட்டியதாக காட்சி கூறப்பட்டுள்ளது. கானகம், காணுயிர்கள் மீதான இத்தகைய அக்கறையை இன்றைய படைப்பாளிகளிடமும் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
மேலும் இதில் பங்கேற்ற இலக்கியவாதிகள் பலரும், பொள்ளாச்சி போன்ற சின்னஞ்சிறு நகரில் இருந்து, ஒரே நாளில் ஆறு புத்தகங்களை வெளியிடுவது போற்றத்தக்க பெரும் இலக்கிய செயல்பாடு என்று பாராட்டினர். இவ்விழாவில், எரியும் பனிக்காடு, ஒரு பொருளாதார அடியளாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களை எழுதிய முருகவேல் உள்ளிட்ட எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.
