பார்முலா கார் வடிவமைப்பு போட்டியில் முதலிடம் பிடித்த கல்லூரி
பார்முலா கார் வடிவமைப்பு போட்டியில் முதலிடம் பிடித்த கல்லூரி
UPDATED : ஜன 28, 2015 12:00 AM
ADDED : ஜன 28, 2015 11:02 AM
கோவை: கோவையில், ஜே.கே.டயர் நிறுவனம் சார்பில் நடந்த, பார்முலா கார் வடிவமைப்பு போட்டியில், ஒரையான் ரேசிங் சோமையா இன்ஜி., கல்லுாரி முதலிடத்தை பிடித்தது.
போத்தனுார் செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீடுவேயில், ஜே.கே.டயர் பார்முலா டிசைன் சேலஞ்ச் - 2015ன் முதலாவது போட்டி, கடந்த 20ம் தேதி துவங்கியது. தேசிய அளவில் நடந்த போட்டியில், மும்பை, கோழிக்கோடு, புனே உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சேர்ந்த, 36 இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகளை சேர்ந்த, 900 மாணவர்கள் பங்கேற்றனர்.
பலவிதமான வடிவங்களில் உருவாக்கப்பட்ட கார்களை, லான் தாம்ஸன் மற்றும் மரியா போனில்லா உள்ளிட்ட வடிவமைப்பு நிபுணர்கள் குழுவினர் கண்காணித்தனர். கார் மாடல்களை, பந்தய வீரர்கள் ஓட்டிப் பார்த்தனர்.
வணிகம் மற்றும் வடிவமைப்பு திட்டப்பிரிவில், மும்பையின் சோமையா, கோழிக்கோடு என்.ஐ.டி., அணிகள் வெற்றி பெற்றன. டைனமிக், என்டியூரன்ஸ், எரிசக்தி சிக்கன முறை வடிவமைப்பில், மும்பை அணி சிறந்த முறையில் செய்திருந்தது. மணிப்பால் பல்கலை அணி, விரைவுந்து மற்றும் ஸ்கிட்பேட் நிகழ்ச்சிகளில் முதலிடத்தையும், ஆட்டோகிராஸ் பிரிவில், புனேயின் ஆக்டேசன் சி.இ.ஓ., அணியும் வென்றன.
ஒட்டுமொத்த ஜே.கே.டயர் பார்முலா டிசைன் - 2015ல், முதலிடத்தை மும்பையின் ஒரையான் ரேசிங் சோமையா இன்ஜி., கல்லுாரியும், மணிப்பால் பல்கலையின் டீம் பார்முலா மணிப்பால் மற்றும் வி.ஐ.டி. பல்கலையின் பிரவேகா ரேசிங் முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடத்தையும் வென்றன.
போட்டி ஒருங்கிணைப்பாளர் சவுமியா காந்தி போஸ் கூறுகையில், "இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்களிடையே உள்ள, படைப்பாற்றல் திறமையை வெளிப்படுத்த, இப்போட்டி நடத்தப்பட்டது" என்றார்.
