சிங்கப்பூரில் நடக்கிறது 14வது உலக தமிழ் இணைய மாநாடு
சிங்கப்பூரில் நடக்கிறது 14வது உலக தமிழ் இணைய மாநாடு
UPDATED : ஜன 29, 2015 12:00 AM
ADDED : ஜன 29, 2015 12:01 PM
காந்திகிராமம்: உலக தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) சார்பில் மே 30 முதல் ஜூன் 1 வரை 3 நாட்கள் சிங்கப்பூரில் 14 வது உலக தமிழ் இணைய மாநாடு நடக்கிறது.
இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் ஆர்வலர்கள், கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அமைப்பு தமிழ் மொழியை கம்ப்யூட்டர், இணையத்தில் மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தமிழ் இணைய மாநாட்டை நடத்தி வருகிறது. 14 வது மாநாடு சிங்கப்பூரில் மே 30 முதல் ஜூன் 1 முதல் நடக்கிறது.
இதில் கம்ப்யூட்டரில் சொற்பிழை, சந்திப்பிழை, இலக்கண திருத்தி மென்பொருட்கள், மின்னகராதி, மின்நூலகம் அமைத்தல், கையடக்க கம்ப்யூட்டரில் தமிழ் பயன்பாடு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள், தமிழ் இணைய வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்களில் தமிழ், ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோசில் பயன்பட கூடிய தமிழ் ’செயலிகளை’ (’ஆப்ஸ்’கள்) உருவாக்குதல், கம்ப்யூட்டர், இணையவழி தமிழ் கல்வி கற்றல், கற்பித்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இதுதொடர்பான ஆய்வு கட்டுரைகளும் பெறப்பட்டு வருகின்றன. மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 50 பேர் பங்கேற்கின்றனர். இந்த தகவலை உத்தமம் அமைப்பின் செயற்குழு உறுப்பினராக உள்ள காந்திகிராம பல்கலை பேராசிரியர் சிதம்பரம் தெரிவித்தார்.
