UPDATED : ஜன 29, 2015 12:00 AM
ADDED : ஜன 29, 2015 03:04 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் கவர்னர் அஜய்குமார் சிங் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கல்லூரியில் வசதிகள் குறித்து, மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார்.
கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரிக்கு நேற்று காலை கவர்னர் அஜய்குமார் சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவ மாணவிகளிடம், படிப்பு மற்றும் மருத்துவக் கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து கேட்டார். பின், அவர்களுடன் கலந்துரையாடினார். ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்காக படிப்பதாக கூறிய மாணவிகளுக்கு, பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து, மருத்துவகல்லூரி வளாகத்தில், சுகாதாரத்துறை இயக்குநர் ராமன், மருத்துவக்கல்லூரி இயக்குநர் கோவிந்தராஜ், டீன் சிவஞானம் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மருத்துவக்கல்லூரி இயக்குனர் கோவிந்தராஜ் கூறும்போது, அரசு மருத்துவக்கல்லூரியில் அடுத்த கல்வியாண்டில், முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பம் தயாரிக்கப்பட்டு அரசிடம் வழங்க உள்ளோம். 11 துறைகளில் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
