மாணவியர் விளையாட்டு - தடகளத்தில் எம்.ஓ.பி., ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரிகள் முதலிடம்
மாணவியர் விளையாட்டு - தடகளத்தில் எம்.ஓ.பி., ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரிகள் முதலிடம்
UPDATED : ஜன 30, 2015 12:00 AM
ADDED : ஜன 30, 2015 12:04 PM
பெரியமேடு: கல்லுாரி அளவிலான, மாணவியருக்கான விளையாட்டு போட்டிகளில், தடகளத்தில், எம்.ஓ.பி., - ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரிகளின் மாணவியர் முதலிடம் பிடித்தனர்.
நீதிபதி பஷிர் அகமத் சயித் கல்லுாரி சார்பில், மகளிர் கல்லுாரி அணிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், நேரு விளையாட்டு அரங்கில் நடந்து வருகின்றன.
அதில், வாலிபால், தடகளம், எறிபந்து, கபடி, கோ கோ என, தமிழகம் முழுவதும் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முதல் நாளான நேற்று, 400 மீ., ஓட்டப் பந்தயத்தில், எம்.ஓ.பி., மாணவி கவிதா, பந்தய துாரத்தை ஒரு நிமிடம், இரண்டு வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
இரண்டாம் இடத்தை, எத்திராஜ் கல்லுாரி மாணவி வர்ஷாவும், ஜெ.பி.ஏ.எஸ்., மாணவி நிவேதாவும் பெற்றனர். 1,500மீ., ஓட்டப் பந்தயத்தில், சோகா இகேடா மாணவி பிரியா, 5:40:2 வினாடிகளில் கடந்து, முதலிடம் பெற்றார்.
எத்திராஜ் மாணவி அஞ்சுகத்திற்கு இரண்டாம் இடமும், எம்.ஓ.பி., மாணவி பிரியாவுக்கு, மூன்றாம் இடமும் கிடைத்தன. நீளம் தாண்டுதலில், ஸ்டெல்லா மேரீஸ் மாணவி ரோச்சல் மரியா மெக்பர்லின், 5.15 மீ., துாரம் தாண்டி முதலிடம் பெற்றார். எத்திராஜ் கல்லுாரி மாணவி ருக்மணி, எம்.ஓ.பி., மாணவி மோனிஷா இருவரும், அடுத்த இரண்டு இடங்களை பிடித்தனர். மும்முறை தாண்டுதலில், ரோச்சல் மரியா மெக்பர்லின் முதலிடம் பெற்றார்.
