தனித்தேர்வர்கள், தத்கல் திட்டத்தின் கீழ் பிப்ரவரி 5 முதல் விண்ணப்பிக்கலாம்
தனித்தேர்வர்கள், தத்கல் திட்டத்தின் கீழ் பிப்ரவரி 5 முதல் விண்ணப்பிக்கலாம்
UPDATED : பிப் 04, 2015 12:00 AM
ADDED : பிப் 05, 2015 11:38 AM
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இயக்குனர் தேவராஜன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: மார்ச் மாதம் நடக்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள், விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் உள்ள சேவை மையத்திற்கு, நாளை முதல் 7ம் தேதிக்குள், நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் விண்ணப்பிப்பவர்களுக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்; தனியார் பிரவுசிங் மையங்களில் விண்ணப்பிக்க இயலாது.
மேலும், ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், ஹால்டிக்கெட் பெற, இன்றே கடைசி நாள். கடந்த 2ம் தேதி முதல், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதுவரை, பதிவிறக்கம் செய்யாதவர்கள், www.tndge.in என்ற தேர்வுத் துறை இணையதளத்தில், இன்றைக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
