வசதிகளை மேம்படுத்தக்கோரி ஒய்.எம்.சி.ஏ., மாணவர்கள் தொடர் போராட்டம்
வசதிகளை மேம்படுத்தக்கோரி ஒய்.எம்.சி.ஏ., மாணவர்கள் தொடர் போராட்டம்
UPDATED : பிப் 05, 2015 12:00 AM
ADDED : பிப் 05, 2015 12:39 PM
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மாணவர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், நேற்று இரவு வரை எந்தவித முடிவும் ஏற்படவில்லை. சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள், நேற்று காலை முதல், உண்ணாவிரதத்திலும், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கோரிக்கை என்ன?
இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது: தென்கிழக்கு ஆசியாவிலேயே, முதல் உடற்கல்வியியல் கல்லூரி என்ற பெருமை பெற்றது, இந்த கல்லூரி. இங்கு, உடற்கல்வி தொடர்பாக, பள்ளிப்படிப்பு முதல், ஆய்வு படிப்பு வரை, படிக்க முடியும். இது, இந்தியாவின் ஒய்.எம்.சி.ஏ., தேசிய கவுன்சில் என்ற, சிறுபான்மையினர் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதன் தலைமையகம், டில்லியில் உள்ளது. இந்த கல்லூரி, தேசிய உடற்கல்வியியல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசின் உதவி பெற்று, உடற்கல்வியியல் பல்கலையின் கீழ், தன்னாட்சி கல்லூரியாக இயங்கி வருகிறது. கடந்த, 90 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கல்லூரியில், சுத்தமான மைதானம், குடிநீர், மாணவர்கள், ஆசிரியர்கள் தங்கும் அறைகள், உணவு அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் திருப்தியாக இல்லை. இந்த கோரிக்கைகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தினர். அப்போதெல்லாம், போதிய நிதி இல்லை என, காரணம் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், இங்குள்ள, மைதானத்தை வாடகைக்கு விடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம், வருமானம் ஈட்டப்படுகிறது. அதன் மூலம், சில கோடி ரூபாய்க்கு மேல், நிதி சேர்ந்துள்ளது. அந்த நிதியை, கல்லூரியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு, நிர்வாகம் பயன்படுத்துவதில்லை. இதுபற்றி மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கும் நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை.
அதையடுத்து, கடந்த மாதம், 19, 30 ஆகிய தேதிகளில், நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். கடந்த, 30ம் தேதி, ஒய்.எம்.சி.ஏ.,யின், டில்லி தேசிய ஆணையத்தில் இருந்து, நிர்வாகிகள் வருகை தந்தனர். அவர்கள், மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றனர். பின், போராட்டம் கைவிடப்பட்டது. வாக்குறுதிகள் அந்த பேச்சுவார்த்தையில்,
* ஒய்.எம்.சி.ஏ., நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்ட, வைப்பு தொகை, கல்லூரியின் தாளாளரிடம் ஒப்படைக்கப்படும்.
* தாளாளர் மற்றும் தலைவர்கள், கல்லூரியின் நிர்வாகத்தை, தன்னிச்சையாகவே செயல்படுத்த உரிமை பெறுகின்றனர்.
* மைதானம் வாடகைக்கு விடுவது, கல்லூரி அலுவலர்கள் மூலமாகவே செய்யப்படும்.
* கல்லூரியில், போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
* கல்லூரி வளாகத்தில் உள்ள, மாணவர் விடுதி, அலுவலர் குடியிருப்புகளில், உள்ள குறைகள், பிப்., மாதத்திற்குள் தீர்க்கப்படும்.
* பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமான, பொருளாளர் ராஜ்குமார் ஜேக்கப்பை, நீக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, உறுதியளித்து கையொப்பமிட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல், கல்லூரியின் தாளாளரை, வங்கி செயல்பாடுகளில் தலையிடும் உரிமையில் இருந்து நீக்கி உள்ளனர். அவர்தான், எங்களுக்காக குரல்கொடுத்து வந்தவர்.
இதனால், எங்கள் கல்லூரியில் வளர்ச்சி ஏதும் ஏற்பட போவதில்லை என, அஞ்சுகின்றோம். எங்கள் அச்சத்தை போக்கும் வகையில், எங்களுடன், டில்லி நிர்வாகத்தினர் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால்தான், போராட்டத்தை கைவிடுவோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, கல்லூரி முதல்வர், ஷீலா ஸ்டீபன் கூறியதாவது:
கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்பது உண்மை தான். அதற்காக, 2 கோடி ரூபாய்க்கும் மேல் தேவைப்படுகிறது. மாணவர் விடுதி சீரமைப்பிற்காக மட்டுமே, 70 லட்சம் ரூபாய்க்கும் மேலாக, தேவைப்படுகிறது. டில்லி நிர்வாகத்திடம் எங்கள் தேவைகளை கூறியுள்ளோம். சரி செய்வதாக டில்லி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
தாளாளரிடம், வங்கி கணக்குகளில் கையொப்பமிடும் பொறுப்பு ஒப்படைப்பது, பொருளாளரை நீக்குவது குறித்து, என்னால் பேச முடியாது. மாணவர்களின் போராட்டம் மேலும், தீவிரம் அடையும் என்பதால், தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். கல்லூரி மீண்டும் திறக்கும் போது, சீரமைப்பு பணிகள் துவங்க வேண்டும் என்பதையும், டில்லி நிர்வாகத்துடன் பேச இருக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த நிலையில், நேற்று காலை 7:00 மணியில் இருந்து, உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுடன், கல்லூரி நிர்வாகம், இரவு, 7:00 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தவோ, உணவு வழங்கவோ முன்வரவில்லை. மாணவர்கள், மனித உரிமை கமிஷன், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்துள்ளனர்.
