பல்கலை தடகள போட்டியில் திருப்பூர் கல்லூரி மாணவன் முதலிடம்
பல்கலை தடகள போட்டியில் திருப்பூர் கல்லூரி மாணவன் முதலிடம்
UPDATED : பிப் 06, 2015 12:00 AM
ADDED : பிப் 06, 2015 10:50 AM
திருப்பூர்: பல்கலை இடையேயான தடகள போட்டியில், திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவன் கிருஷ்ண பிரசாத் முதலிடம் பெற்றார்.
கர்நாடகா மாநிலம் மங்களூருவில், பல்கலை இடையேயான தடகள போட்டி, கடந்த மாதம் நடந்தது. திருப்பூரை சேர்ந்த மாணவன் கிருஷ்ண பிரசாத், கோலூன்றி தாண்டுதல் போட்டியில் பங்கேற்று, முதலிடம் பெற்றார். இவர், 4.60 மீ., உயரம் தாண்டி, வேர்ல்டு யுனிவர்சிட்டி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
திருப்பூர் புஷ்பா நகரை சேர்ந்த கிருஷ்ண பிரசாத், நாகர்கோவிலில் உள்ள லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ., முதலாமாண்டு படிக்கிறார். 2013ல், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை சார்பில் நடந்த தடகளத்தில், உயரம் தாண்டுதலில் 2.10 மீ.,; கோலூன்றி தாண்டுதலில் 4.40 மீ.,; தடை தாண்டுதலில் 15.7 நொடியில் கடந்தார்.
கொல்கத்தாவில் நடந்த, அகில இந்திய பல்கலை தடகளத்தில், உயரம் தாண்டுதலில் 2ம் இடம் பெற்றார். கடந்தாண்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த மாநில தடகளத்தில், கோலூன்றி தாண்டுதலில் 4.81 மீ., உயரம் தாண்டி புதிய சாதனை புரிந்தார். அதே ஆண்டு, லக்னோவில் நடந்த அத்லெட்டிக் பெடரேஷன் ஆப் இந்தியா தடகளப் போட்டியில், கோலூன்றி தாண்டுதலில் 2ம் இடம் பெற்றார்.
கிருஷ்ணபிரசாத் கூறுகையில், "வேர்ல்டு யுனிவர்சிட்டி போட்டியில் பதக்கம் வெல்ல, தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதே லட்சியம். இதுவரை பல போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், அரசு சார்ந்த சலுகையோ, பரிசு தொகையோ கிடைக்கவில்லை. அரசு, உதவிக்கரம் நீட்டினால், மேலும் பிரகாசிக்க முடியும், என்றார்.
